Skip to main content

“தம்பி விஜய்க்கு தேவைப்படுகிறது; ஆனால் எனக்கு தேவையில்லை” - சீமான் 

Published on 05/04/2025 | Edited on 05/04/2025

 

Seeman comments on Vijay being given Y category security

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய், பல்வேறு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். தொடர்ச்சியாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி புதிய மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் என அடுத்தடுத்த நியமனங்களை செய்து வருகிறார். அதே சமயம் சமூக வலைதள அறிக்கையின் மூலமாகவே அரசியல் செய்துகொண்டிருந்த விஜய் முதன்முதலாக விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக போராடும் பரந்தூர் மக்களை நேரில் சந்தித்து ஆதரவு அளித்தார். 

இதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் த.வெ.க.வின் இரண்டாம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடந்த பொதுக்கூட்டத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசையும், மாநிலத்தில் ஆளும் திமுக அரசையும் கடுமையாக சாடியிருந்தார். அதிலும் குறிப்பாக  வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு பாஜகவிற்கும் தான் போட்டியே என்று போகிற போக்கில் பாரம்பரிய கட்சியான அதிமுகவையும் மறைமுகமாக தாக்கியிருந்தார். 

இந்த நிலையில் தான் நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒய் பிரிவு பாதுகாப்பு  வழங்கியுள்ளது. அதன்படி,ஒய் பிரிவில் சி.ஆர்.பி.எப். (C.R.P.F. - Central Reserve Police Force) வீரர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் என மொத்தமாக 8 லிருந்து 11 பேர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “தம்பி விஜய்க்கு தேவைப்படுகிறது, அதனால் அவர் ஒய் பிரிவு பாதுகாப்பு கேட்டு பெற்றிருக்கிறார். ஆனால் அது எனக்கு தேவைப்படவில்லை. நான் தான் எனது நாட்டிற்கு, எனது மக்களுக்கு பாதுகாப்பு. அதனால் எனக்கு பாதுகாப்பு தேவையில்லை. மக்கள் அரசியலுக்கு அது அவசியமில்லை; ராணுவ அரசியலுக்கு தான் தேவைப்படும் என்று நான் நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்