Skip to main content

இரண்டு மாணவர்களின் மரணம்..! சோகத்தில் கிராமம்! 

Published on 27/09/2021 | Edited on 27/09/2021

 

School Children passes away in trichy police investigation

 

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் நவல்பட்டு பகுதி அண்ணாநகர் அருகே உள்ள கட்டளை வாய்க்காலில் அப்பகுதியைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். இவர்களில் இருவர் நீரில் மூழ்கி இறந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் நவல்பட்டு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த கமல், ஜஸ்டின், கௌதம், சஞ்சீவி ஆகிய நான்கு மாணவர்களும் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்துவருகின்றனர். நெருங்கிய நண்பர்களான இவர்கள் நான்கு பேரும் நேற்று (26.09.2021) விடுமுறை காரணமாக அருகில் உள்ள கட்டளை வாய்க்காலில் குளிக்கச் சென்றனர்.

 

அப்படி கட்டளை வாய்க்காலில் குளித்துக்கொண்டிருந்தபோது கமல் மற்றும் ஜஸ்டின் ஆகிய இருவரும் ஆழமான பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கியுள்ளனர். அவர்கள் இருவருக்கும் நீச்சல் தெரியாததால் கரை சேர முடியாமல் தண்ணீரில் தத்தளித்தனர். ஒரு கட்டத்திற்கு மேல், இருவரும் மூச்சுத் திணறி பரிதாபமாக பலியாகியுள்ளனர். 

 

உடனடியாக அப்பகுதியில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் வாய்க்காலில் இறங்கி மாணவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். சில மணி நேர தேடலுக்குப் பிறகு இரு மாணவர்களையும் பிணமாக மீட்டனர்.

 

குளிக்கச் சென்ற இடத்தில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த நவல்பட்டு காவல்துறையினர், விசாரணை செய்துவருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்