Skip to main content

சேலத்தில் உணவக உரிமையாளர் உள்பட 4 பேருக்கு கரோனா!

Published on 31/05/2020 | Edited on 31/05/2020

 

salem restaurant owner and three employees coronavirus


சேலம் மாநகர பகுதிகளுக்குள் கடந்த 35 நாள்களுக்கும் மேலாக புதிதாக கரோனா தொற்று ஏற்படாமல் இருந்ததை அடுத்து, மாநகர பகுதி மட்டும் பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இரு நாள்களுக்கு முன்பு, பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான கைதிகள் இருவருக்கு புதிதாக கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.


இருவரில் ஒருவர், சேலம் மாநகர பகுதிக்கு உட்பட்ட தாதகாப்பட்டியைச் சேர்ந்தவர். மற்றொரு கைதி, இரும்பாலை பகுதியைச் சேர்ந்தவர். இதனால் பச்சை மண்டலத்தில் இருந்த சேலம் மாநகராட்சி பகுதி மீண்டும் ஆரஞ்சு மண்டலத்துக்கு மாறி உள்ளது. இது ஒருபுறம் இருக்க, சேலத்தில் உள்ள பிரபல உணவக உரிமையாளர் உள்பட நான்கு பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. சேலம் சாரதா கல்லூரி சாலையில் உள்ள ஒரு பிரபல உணவகத்தின் உரிமையாளர் மற்றும் அங்கு பணியாற்றி வந்த சப்ளையர்கள் 3 பேர் என நான்கு பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர்கள் நான்கு பேரும் உடனடியாக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உணவகத்திற்கு கிருமி நாசினி மருந்தும் தெளிக்கப்பட்டது.

உணவக உரிமையாளர் உள்ளிட்ட நால்வருக்கு நோய்த்தொற்று இருக்கும் தகவல் வெளியாதனால், கடந்த சில நாள்களாக அவர்களிடம் உணவு பார்சல்கள் வாங்கிய வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  குறிப்பிட்ட அந்த உணவகத்தில் உணவு பார்சல்கள் வாங்கிச்சென்ற வாடிக்கையாளர்கள் தாமாகவே முன்வந்து கரோனா நோய்த்தொற்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

 

சார்ந்த செய்திகள்