Skip to main content

சேகோ ஆலையில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த தொழிலாளி விஷ வாயு தாக்கி உயிரிழப்பு!

Published on 29/11/2019 | Edited on 29/11/2019

ஆத்தூர் அருகே, சேகோ ஆலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்றபோது விஷ வாயு தாக்கியதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு கூலித்தொழிலாளி உயிரிழந்தார். மேலும், நான்கு பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.


சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த கெங்கவல்லி அருகே உள்ள பள்ளக்காட்டைச் சேர்ந்தவர் மாணிக்கம் (65). அதே பகுதியில், கடந்த 15 ஆண்டுகளாக சேகோ ஆலை நடத்தி வருகிறார். ஜவ்வரிசி, ஸ்டார்ச் ஆகியவை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். 


இந்த ஆலையில் மரவள்ளிக் கிழங்குகளை அரைத்த பின்னர் வெளியேற்றப்படும் கழிவு நீரை தேக்கி வைக்க, 60 அடி நீளம், அகலம் மற்றும் 20 அடி ஆழத்தில் இரண்டு தொட்டிகள் கட்டப்பட்டு உள்ளன. இந்த இரு தொட்டிகளுக்கும் நடுவில் 8 அடி நீளம், மூன்றடி அகலம் 20 அடி ஆழத்தில் ஒரு கழிவு நீர் தொட்டியும் கட்டப்பட்டு உள்ளது. இந்த தொட்டிகளின் மீது மூடி போட்டு மூடி வைத்துள்ளனர்.

salem district attur sago factory septic tank cleaning incident


இந்த சேகோ ஆலையில் அம்மம்பாளையம் கண்ணகி நகரைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் மணி என்கிற ஜெயச்சந்திரன் (35) கூலி வேலை செய்து வந்தார். இதே ஆலையில், பள்ளக்காட்டைச் சேர்ந்த வேலாயுதம் (45), காங்கமுத்து (40), கலியன் (48) ஆகியோரும் வேலை செய்து வருகின்றனர்.


இந்நிலையில், வெள்ளிக்கிழமை (நவ. 29) மாலை 5.30 மணியளவில், இரண்டு பெரிய தொட்டிகளுக்கு நடுவில் உள்ள தொட்டியில் இருந்து கழிவு நீரை வெளியேற்றுவதற்காக வேலாயுதம் என்பவர், தொட்டியின் மீது மூடப்பட்டிருந்த மூடியை அகற்றினார். அப்போது எதிர்பாராத விதமாக கழிவுநீர்த் தொட்டியில் இருந்து வெளியேறிய விஷ வாயு தாக்கியதில் வேலாயுதத்திற்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, தொட்டிக்குள்ளேயே மயங்கி விழுந்தார்.


இதைப்பார்த்து பதற்றம் அடைந்த சேகோ ஆலை உரிமையாளர் மாணிக்கம், உடனடியாக அதே தொட்டிக்குள் குதித்து வேலாயுதத்தைக் காப்பாற்ற முயன்றார். ஆலை அதிபர் தொட்டிக்குள் குதிப்பதை பார்த்த மணி என்கிற ஜெயச்சந்திரனும் அவரை காப்பாற்றுவதற்காக தொட்டிக்குள் குதித்தார். காங்கமுத்து, கலியன் ஆகியோரும் அவர்களை மீட்பதற்காக தொட்டிக்குள் அடுத்தடுத்து குதித்துள்ளனர்.


இதில், மணி என்கிற ஜெயச்சந்திரனும் விஷ வாயு தாக்கியதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினார். மற்றவர்கள் அவரை மீட்டு, ஆத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதனையில் அவர், வரும் வழியிலேயே உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. 


ஆலை அதிபர் மாணிக்கம் உள்ளிட்ட நால்வரும் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


இதுகுறித்து தகவல் அறிந்த கெங்கவல்லி காவல்நிலைய உதவி ஆய்வாளர் முருகேசன் மற்றும் காவலர்கள் நிகழ்விடம் விரைந்து சென்று விசாரித்தனர். சடலத்தை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த மணிக்கு, சங்கீதா என்ற மனைவியும், இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்த சம்பவம் கெங்கவல்லி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்