கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் உள்ள பெரிய சிறுவத்தூர், மேலூர், எல்வடி, எலியத்தூர், தென் செட்டி எந்தல், கனியாமூர், அம்மையகரம், பெத்தாசமுத்திரம், ஈரியூர், வடக்கனந்தல், பாதாரம் பள்ளம், ராமச்சந்திரா நகர், ஆகிய ஊர்களில் கடந்த சில மாதங்களாக தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்துவந்தன. இந்த நிலையில், கடந்த 14ஆம் தேதி பெரிய சிறுவத்தூர் கிராமத்தில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ஜெயந்தி அவரது மகள் ராஜேஸ்வரி ஆகியோர் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் நகையை அறுத்துச் சென்றனர்.
அதேபோன்று அம்மையகரம் பகுதியைச் சேர்ந்த 72 வயது விசாலாட்சி என்பவரது வீட்டிலிருந்து ரூ. 25,000 பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் களவுபோயின. இப்படி தொடர் திருட்டின் காரணமாக இப்பகுதி கிராம பொதுமக்கள் பெரும் பயத்துடன் வாழ்ந்துவந்தனர். இதையடுத்து, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் உத்தரவின் பேரில் டிஎஸ்பி ராஜலட்சுமி மேற்பார்வையில் சின்னசேலம் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் ஆரோக்கியதாஸ் துரைராஜ் மற்றும் தனிப்படை போலீசார் கொள்ளையர்களைத் தீவிரமாக தேடிவந்தனர்.
கொள்ளை நடந்த இடங்களில் கிடைத்த தடயங்களைச் சேகரித்தனர். இதனடிப்படையில் சின்ன சேலத்தைச் சேர்ந்த பிரகாஷ், கொங்கராபாளையம் கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜ், சக்திவேல் ஆகிய மூவரையும் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் திருடிய நகைகளைப் பல்வேறு நகைக் கடைகளில் விற்பனை செய்துள்ளனர். அவற்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.