Skip to main content

பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடு... பள்ளி தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!

Published on 03/05/2022 | Edited on 03/05/2022

 

Restriction for teachers involved in the general examination process ... School Examinations Directorate Announcement!

 

பொதுத்தேர்வு பணியில் பங்கேற்க இருக்கும் ஆசிரியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் அறிவுறுத்தல்களை பள்ளி தேர்வுகள் இயக்ககம் வழங்கியுள்ளது.

 

தமிழகத்தில் நாளை மறுநாள் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து, 10, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் அடுத்தடுத்து பொதுத்தேர்வு தொடங்க இருக்கிறது. இந்த நிலையில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு எழுதும்போது கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தனிமனித இடைவெளியைப் பின்பற்றி தேர்வு நடந்தாலும்கூட மாஸ்க் அணிவது கட்டாயம் என அரசு தெரிவித்திருந்தது. தேர்வுப்பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் பறக்கும்படை அதிகாரிகளும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருந்தது.

 

இந்நிலையில் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் செல்போன் உள்ளிட்ட இதர தொடர்பு சாதனங்களை வைத்திருக்க கூடாது. அப்படி வைத்திருப்பது கண்டறியப்பட்டதால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒழுங்கீன செயல்களுக்கு உடந்தையாகவோ அல்லது ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகம் முயன்றால் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என பள்ளி தேர்வுகள் இயக்ககம் அறிக்கை வாயிலாகத் தெரிவித்துள்ளது. மேலும் அந்த அறிக்கையில் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தால் பருவத்தேர்வு ரத்து செய்யப்படுவதோடு தேர்வெழுத நிரந்தர தடை விதிக்கப்படும், தேர்வில் காப்பி அடித்தால் மாணவரின் தேர்வை ரத்து செய்வதோடு ஓராண்டு தேர்வு எழுத தடை விதிக்கப்படும் உள்ளிட்ட  தேர்வு அறைகளில் நடக்கும் 15 வகையான குற்றங்களின் தன்மைகள், அதற்கான தண்டனை அளவு உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்