
சி.ஐ.டி.யு ரெயில்வே காண்ட்ராக்ட் லேபர் யூனியனின் 3வது மாநாடு திருச்சி கல்லுக்குழியில் உள்ள புனித அந்தோணியார் கோவில் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
இந்த மாநாட்டிற்கு அச்சங்கத் தலைவர் மனோகரன் தலைமை வகித்து மாநாட்டுக் கொடியை ஏற்றி வைத்தார். அஞ்சலி தீர்மானத்தை சுபாஷினி வாசித்தார். சி.ஐ.டி.யூ திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் துவக்க உரை ஆற்றினார். பொதுச்செயலாளர் அறிக்கையை மதியழகன் வாசித்தார். வரவு – செலவு அறிக்கையை பொருளாளர் சரவணன் தாக்கல் செய்தார்.
சங்க அமைப்பு விதி திருத்தம் குறித்து டி.ஆர்.இ.யூ துணைத் தலைவர் ஜானகிராமன் பேசினார். மாநாட்டில் நிரந்தர தன்மை உள்ள வேலைகளில் பணிபுரியும் ரயில்வே காண்ட்ராக்ட் தொழிலாளர்களை பணி நியமனம் செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஊதிய சட்டத்தை அமல்படுத்த வேண்டும். ரயில்வே வாரிய உத்தரவுபடி அகவிலைப்படி வழங்க உத்தரவிட வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் என்ற முறையில் நிரந்தரத் தன்மை உள்ள வேலைகளில் பணிபுரியும் காண்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். ரயில்வே காண்ட்ராக்ட் வேலை செய்யும் போது வேலை நேரத்தில் விபத்து ஏற்பட்டால் இழப்பீடு பெற்றுத் தருவதற்கும், ரயில்வே மருத்துவமனையில் மருத்துவ வசதிக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இ.பி.எப், இ.எஸ்.ஐ உத்தரவாதப்படுத்த காண்ட்ராக்டர் பில்லில் இருந்து பணம் பிடித்து நேரடியாக சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்ப வேண்டும். அதிகபட்ச வேலை நேரம் 8 மணி நேரம் என்பதை உறுதிப்படுத்தி கூடுதலாக வேலை செய்யும் நேரத்திற்கு ஓவர்டைம் வழங்க வேண்டும். ரயில்வே காண்ட்ராக்ட் வேலைக்கு வருவதற்கு மூன்றில் ஒரு பங்கு விலையில் சீசன் டிக்கெட், ரயில்வே பாஸ் வழங்க ரயில்வே அமைச்சகம் உத்தரவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.