
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக்கோரி தமிழக சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது.
அண்மையில் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவானது விரைவில் மக்களவையிலும் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. வக்பு வாரியம் தனிப்பட்ட முறையில் தங்களுடைய சொத்துக்களை கணக்கிட முடியாது; வக்பு வாரியம் ஒரு சொத்தை உரிமைகோரும் பொழுது அது அரசின் சொத்தாக இருந்தால் குறிப்பிட்ட மாவட்ட ஆட்சியர் மூலமாக அது அரசின் சொத்தாக வகைமாற்றம் செய்ய முடியும் உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களை கொண்டு வக்பு வாரிய சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதனை பல்வேறு மாநிலங்கள் எதிர்த்து வருகின்றன. குறிப்பாக கேரளா, கர்நாடகா மாநில சட்டப் பேரவைகளில் இதை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், தமிழக சட்டப்பேரவையிலும் இன்று வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து தீர்மானம் கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த சிறப்பு தீர்மானத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வர இருக்கிறார்.

நெல்லையைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி உயிரிழந்த நிலையில் அந்த துக்க நிகழ்வில் பங்கேற்க எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நெல்லை சென்றுள்ள நிலையில், இன்று அவர் சட்டப்பேரவை நிகழ்வில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேநேரம் அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்ததைத் தொடர்ந்து அதிமுக-பாஜக கூட்டணி ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை சந்தித்ததைத் தொடர்ந்து வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை உடனடியாக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற முயற்சிப்பதாக அதிமுக கருதுகிறது. இந்தநிலையில் சட்டப்பேரவையில் இன்று வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை எதிர்க்கும் தீர்மானத்திற்கு அதிமுக உறுப்பினர்கள் எவ்வாறு தங்களுடைய நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி அதிமுக கொறடா முன்னிலையில் தன்னுடைய கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல்களை கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.