Skip to main content

இமயமலைக்கு சென்று அறிவு வாங்கி வந்துள்ளார் ரஜினிகாந்த்: துரைமுருகன் கிண்டல்!

Published on 15/07/2018 | Edited on 15/07/2018


இமயமலைக்கு சென்று அறிவை வாங்கி வந்ததால்தான் நடிகர் ரஜினிகாந்த் 8 வழிச்சாலைக்கு வரவேற்பு தெரிவிக்கிறார் என திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் சாலையில் கிடந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தை போலீசிடம் ஒப்படைத்த சிறுவன் முகமது யாசினை, சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில், நடிகர் ரஜினிகாந்தை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்து, தங்க செயின் பரிசளித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், சிறுவன் யாசினின் செயலை கண்டு நான் ரொம்ப பெருமைப்படுகிறேன். இந்த சிறுவனை எப்படி வாழ்த்துவது என்று தெரியவில்லை. இப்படி சிறுவனை பெற்றவர்களையும், வளர்த்தவர்களையும் மனமாற வாழ்த்துகிறேன். சிறுவன் என்ன படிக்க நினைத்தாலும் என் பிள்ளை போல் நினைத்து படிக்க வைப்பேன் என அவர் கூறினார்.

 

 

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை மீண்டும் சிறிது நேரம் கழித்து சந்தித்த ரஜினிகாந்த், 8 வழிச்சாலை போன்ற திட்டத்தால் நாடு முன்னேறும் என்றும், தொழில் வாய்ப்புகள் தமிழகத்திற்கு வரும் என்றும் நாடாளுமன்றம், சட்டமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது நல்லது என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் பங்கேற்ற தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரைமுருகன், செய்தியாளர்களின் சந்திப்பின் போது, மேள தாளத்துக்கு ஏற்றவாறு கையால் தாளம் போட்டார். அவரிடம், நடிகர் ரஜினிகாந்த் 8 வழிச்சாலை, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டங்களுக்கு அவர் வரவேற்பு தெரிவித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அவர்,

இமயமலைக்கு சென்று அறிவு வாங்கி வந்துள்ளதால்தான் ரஜினிகாந்த் 8 வழிச்சாலை, ஒரே நாடு, ஒரே தேர்தல் உள்ளிட்ட திட்டங்களுக்கு வரவேற்பு தெரிவிக்கிறார் என கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்