Skip to main content

குழந்தைகள் வார்டுக்கு பக்கத்தில் கரோனா வார்டா? மார்க்சிஸ்ட் கோரிக்கையை ஏற்று மாற்றிய ஆட்சியர்

Published on 14/07/2020 | Edited on 14/07/2020

pudukottai

 

பிறந்த சில மணி நேரங்களே ஆன பச்சிளங் குழந்தைகள் இருக்கும் அறையில் இருந்து 30 அடி தூரத்தில் கரோனா தொற்றுள்ளவர்களுக்கான சிகிச்சை வார்டு அமைத்திருப்பது புதுக்கோட்டை மக்களுக்கு வேதனையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கோரிக்கையை ஏற்று கரோனா வார்டை வேறு இடத்திற்கு மாற்றியமைத்துள்ளார் ஆட்சியர்.

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரிக்கும்போது, அவர்களை தங்க வைத்து சிகிச்சை அளிக்க புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனையில் சுமார் 700 படுக்கைகளும், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மருத்துவமனையில் 200 படுக்கைகளும் தயாராக உள்ளன என்று மருத்துவக்குழுவினர் அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் கூறினார்கள். 

 

தற்போது கரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் ராணியார் மருத்துவமனையில் சுமார் 200 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள், 500 படுக்கைகள் காலியாக இருக்கின்றன. பின்னர் எதற்காக சுகாதாரப் பணிகள் இணை இயங்குநர் (பொ) மலர்விழி அவசரமாக ஆட்சியரிடம் அனுமதி பெற்று அறந்தாங்கி குழந்தைகள் வார்டுக்கு அருகே கரோனா தொற்று சிகிச்சைக்கு அனுமதி பெற்றார் என்று கேள்வி எழுந்துள்ளது.

 

அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் கடந்த சில ஆண்டுகளில் சிசு இறப்புகளே இல்லாமல், சுமார் 10 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளார்கள் என்று பெருமையாக அமைச்சர் விஜயபாஸ்கர் முன்பு மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தார்கள். ஒவ்வொரு மாதமும் சுமார் 390 முதல் 400 குழந்தைகள் பிறக்கின்றன.  இப்படியான மருத்துவமனையை கரோனா வார்டாக மாற்றுவதைத்தான் மக்கள் எதிர்க்கிறார்கள். 

 

கரோனா தொற்று சிகிச்சை மையமாக பாலிடெக்னிக் கல்லூரி, அரசு கலைக்கல்லூரி இடங்களை தேர்வு செய்தவர்கள் ஏன் இப்படி குழந்தைகள் வார்டு அருகே மாற்றிக் கொண்டார்கள் என்பது தான் கேள்விக்குறியாக உள்ளது.

 

இது குறித்த சிபிஎம் மாவட்டச் செயலாளர் கவிவர்மன் கூறும் போது,


“கரோனா சிகிச்சை நல்ல முறையில் அளிக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. குழந்தைகள் வார்டுக்கு அருகே கரோனா வார்டு அமைப்பதைத்தான் எதிர்க்கிறோம். கரோனா வார்டுக்கு போக குழந்தைகள் வார்டு வழியாகத்தான் போக வேண்டும். குழந்தைகளையும், கர்ப்பிணிகளையும் கவனித்து கொள்ளும் உறவினர்கள் அந்த வழியில்தான் அமர்ந்திருப்பார்கள். கரோனா ஆம்புலன்ஸ் போகும்போது அதிலிருந்து காற்றில் உறவினர்களுக்கு தொற்று ஏற்பட்டு வார்டில் இருக்கும் தாய்க்கும், சேய்க்கும் தொற்றுபரவாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?”

 

“இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டபோது மறு பரிசீலனை செய்வதாக கூறினார்கள். ஆனால் ஆட்சியரிடம் தவறான தகவல் கொடுத்து அனுமதி பெற்றுள்ளதாக தெரிகிறது. இரவில் பல கரோனா தொற்று உள்ளவர்களை கொண்டு வந்து சேர்த்துள்ளனர். அதனால் சி.பி.எம். இரவில் தர்ணா போராட்டத்தை நடத்தியுள்ளது. மறுபடியும் வார்டு மாற்றும் வரை தொடர் போராட்டம் நடத்தப்படும்” என்றார்.

 

இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரியின் கவனத்திற்கு தகவல் சென்றதால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு குழந்தைகள் வார்டு அருகில் அமைக்கப்பட்டிருந்த கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 18 பேரும் இன்று செவ்வாய் கிழமை 8 மணி முதல் ஆம்புலன்ஸ்கள் மூலம் புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இதனால் நிம்மதியடைந்த மக்கள் ஆட்சியருக்கு நன்றி கூறி வருகின்றனர். பொதுமக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்த தயாரான தோழர்களும் ஆட்சியர் நடவடிக்கையை பாராட்டி கலைந்து சென்றனர்.

 

அதன்பிறகு ஜெ.டி. (பொ) மலர்விழி மாற்று இடம் பார்ப்பதற்காக ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டிருந்த அரசு பாலிடெக்னிக் கல்லூரி, கல்லனேந்தல் அரசு கலைக்கல்லூரிகளை ஆய்வு செய்து வருகிறார்.

 

அதேபோல கரோனா பரிசோதனை செய்ய எடுக்கப்படும் மாதிரிகள் பிரசவ வார்டுக்குள் உள்ள மைக்ரோ லேபில்தான் பாதுகாக்கப்பட்டு, மாலையில் சோதனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதனால் அதே மருத்துவமனையில் மற்றொரு கட்டிடத்தில் மாதிரிகளை வைத்து பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

பிரதமர் மோடி மீது காவல் நிலையத்தில் புகார்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Police complaint against Prime Minister Modi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன் தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும். அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார்.

பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

Police complaint against Prime Minister Modi

இந்நிலையில் வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது டெல்லி மந்திர்மார் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர்  பிருந்தா காரத் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “ஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் பதவியில் உள்ள மோடி பேசியுள்ளார். எனவே இந்த வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையிடவும் வழக்கறிஞர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் வெறுப்பு பேச்சுக்களை தடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இன்று (23.04.2024) விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.