
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நாச்சியார் பேட்டை கிராமத்தில் இன்று கிராமசபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில், திருநாவலூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராதாகிருஷ்ணன் கலந்துகொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், அந்த கிராமத்திற்கு வந்திருந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராதாகிருஷ்ணன் கூட்டத்தை தொடங்குவதற்கான பணிகளை செய்தார். அப்போது அங்கு வந்திருந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஏராளமானோர், இந்த கிராமத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடந்து ஐந்து மாதங்களுக்கு மேலாகியும் தற்போது வரை ஊராட்சி மன்றத் தலைவர் சந்தானம் சக்திவேல் என்பவரை பணி செய்ய விடாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஊராட்சி மன்ற துணை தலைவர் தடுத்து வருவதாக தெரிவித்தனர். மேலும், இதனால் ஊராட்சி நிர்வாகம் சரிவர செயல்பட முடியாமல் அதிகாரிகளின் கட்டுப்பாட்டிலேயே செயல்படுவதால் தொடர்ந்து முறைகேடு நடப்பதாகவும் குற்றஞ்சாட்டினர். இவற்றையெல்லாம் சரி செய்த பின்னரே கிராம சபை கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் வேளாண் உதவி அலுவலர் நல்ல குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், மக்கள் சமாதானம் அடையாததால் கிராமசபை கூட்டத்தை நடத்தாமலேயே அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
நாடு முழுவதும் பஞ்சாயத்துராஜ் தினத்தையொட்டி கிராமசபை கூட்டம் நடந்த நிலையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு உரியமுறையில் முக்கியத்துவம் அளிக்காததால் நாச்சியார் பேட்டை கிராமத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தப்படவில்லை.