கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகா முரி அவர்கள் கடலூர் நெல்லிக்குப்பம் பண்ருட்டி ஆகிய பகுதிகளில் அரசு திட்டத்தின்படி நடைபெற்று வரும் கட்டிடப் பணிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றை பார்வையிடுவதற்காக சென்றிருந்தார். பண்ருட்டி அருகிலுள்ள அண்ணாகிராமம் பகுதியில் கட்டப்பட்டு வரும் நீர் தேக்கத் தொட்டி, பண்ருட்டி நகராட்சியில் சுகாதார நிலைய கட்டுமானப் பணி ஆகியவற்றைப் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், பண்ருட்டி அரசு மருத்துவமனை காந்தி மார்க்கெட் ஆகியவற்றிற்கும் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அவர் சென்ற பகுதிகளில் எல்லாம் டூவீலர்களிலும் நடந்து செல்லும் பொதுமக்கள் பலரும் முகக்கவசம் அணியாமல் சென்று கொண்டிருந்ததை பார்த்த மாவட்ட ஆட்சியர், அவர்களை நேரடியாக சந்தித்து ஒவ்வொருவரும் முகக்கவசம் அணிய வேண்டிய அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதையடுத்து அவர் அரசு அதிகாரிகளிடம் கூறும்போது, கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் பணி செய்யும் ஊழியர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.
அதேபோல் வாகனங்களுக்கு பெட்ரோல் டீசல் நிரப்ப வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வரவேண்டும் அப்படி முகக் கவசம் அணியாமல் வாகனம் ஓட்டி வரும் வாகனங்களுக்கு கண்டிப்பாக பெட்ரோல், டீசல் வழங்கக்கூடாது என்று வலியுறுத்தி உத்தரவிட்டுள்ளார். மாவட்ட ஆட்சியரின் இந்த உத்தரவை பலரும் வரவேற்றுள்ளனர் மாவட்ட ஆட்சியரின் ஆய்வின்போது பண்ருட்டி நகராட்சி ஆணையர் பிரபாகரன், பொறியாளர் சிவசங்கரன், அரசு தலைமை மருத்துவர் மாலினி, கரோனா சிறப்பு மருத்துவர் தோரியன், நகராட்சி துப்புரவு அலுவலர் பாக்கியநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.