
தமிழகத்தில் பரவலாக வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வரும் நிலையில், நீலகிரியில் மழைப் பொழிவு காரணமாக கள்ளாரில் இருந்து ரன்னிமேடு பகுதிக்கு இடையேயான தண்டவாளத்தில் பாறை மற்றும் மண் சரிவு ஏற்பட்டதால் கடந்த நான்காம் தேதி முதல் மலை ரயில் நிறுத்தப்பட்டது.
பாதை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த எட்டாம் தேதி மீண்டும் மலை ரயில் சேவை தொடங்கியது. இதனையடுத்து நீலகிரி மாவட்டம் குன்னூரில் தொடர்ந்து மழை பொழிந்து வரும் நிலையில், உதகை - குன்னூர் இடையேயான மலை ரயில் பாதையின் சில இடங்களில் கடந்த 9 ஆம் தேதி மண் சரிவு ஏற்பட்டதால் பாதுகாப்பு கருதி கடந்த 10 ஆம் தேதி முதல் மலை ரயில் சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தண்டவாள பராமரிப்பு பணிகள் முடிவடையாத நிலையில் மேலும் இரண்டு நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் நவம்பர் 19 ஆம் தேதி முதல் மலை ரயில் இயக்கப்படும் என ரயில்வே துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.