
சென்னை தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் ஷோபா ஆடையகம் என்ற துணிக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் இரண்டாவது மாடியில், இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை கண்ட கடை ஊழியர்கள், உடனடியாக அலறியடித்து ஓடி கடையை விட்டு வெளியேறினர்.
இந்த பயங்கர தீ விபத்து குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் அடிப்படையில், தியாகராய நகர், தேனாம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் இருந்து 4 வாகனங்களில் சென்று தீயணைப்புத்துறையினர் கடையில் எரிந்து கொண்டிருக்கும் தீயை அணைக்க போராடி வருகின்றனர். தீ விபத்து ஏற்பட்ட துணிக்கடையில் இருந்து மற்ற கடைகளுக்கு தீ பரவாமல் இருக்க தீயணைப்புத்துறையினர் தீவிரமாக போராடி வருகின்றனர்.
மிக குறுகிய இடமான ரங்கநாதன் தெருவில் அதிகளவில் கடைகள் இருப்பதால் நாள்தோறும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இந்த சூழ்நிலையில் துணிக்கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதால், அங்கிருக்கக் கூடிய பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.