Skip to main content

கணவரின் தாயை அடித்துக் கொன்ற மனைவி கைது! 

Published on 07/09/2023 | Edited on 07/09/2023

 

mother in law passes away police arrested daughter in law

 

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள பாண்டியன் குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முனியன், சின்ன பாப்பா தம்பதி. இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவர்களின் மூன்றாவது மகனான பாஸ்கர்(36), திருமணமாகி சங்கீதா என்ற மனைவியுடன் அதே ஊரில் தனித்து வசித்து வருகிறார். 

 

சில ஆண்டுகளுக்கு முன்பு பாஸ்கர் ஒரு விபத்தில் சிக்கி ஒரு காலை இழந்தார். விபத்தில் மோசமாகப் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் காலை அகற்றி உள்ளனர். இதன் பிறகு சிகிச்சை பெற்று வீட்டுக்கு வந்த பாஸ்கரால் முன்பு போல வேலைகள் செய்து சம்பாதிக்க முடியாமல் வீட்டில் இருந்து வருகிறார். 

 

இந்த நிலையில், அவரது மனைவி சங்கீதா 100 நாள் வேலைத் திட்டத்திற்குச் சென்று சம்பாதிக்க ஆரம்பித்துள்ளார். அப்போது அவருக்கு அங்கு வேலைக்கு வரும் ஆண் நண்பர்களுடன் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து ஊர் மக்கள் சங்கீதா மாமியார் சின்ன பாப்பாவிடம் தெரிவித்துள்ளனர். அவர் தனது மருமகள் சங்கீதாவை கண்டித்துள்ளார். இதனால் சங்கீதா, மாமியார் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே அவ்வப்போது தகராறு நடந்து வந்துள்ளது.

 

இது சம்பந்தமாக நேற்று சின்ன பாப்பாவுக்கும் சங்கீதாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற சங்கீதா, அங்கு கிடந்த மரக்கட்டை ஒன்றை எடுத்து மாமியாரை பலமாகத் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த சின்ன பாப்பா ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் அனுப்பி வரவழைத்தனர். அங்கு வந்த மருத்துவக் குழுவினர், சின்ன பாப்பாவை பரிசோதித்தபோது அவர் உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

 

இதையடுத்து செஞ்சி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையிலான போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்து சின்ன பாப்பா உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

மேலும், இது குறித்து சின்ன பாப்பாவின் மகன் சிவக்குமார் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் மருமகள் சங்கீதாவை கைது செய்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்