Skip to main content

‘நக்கீரன்’ கோபாலை தவிர்த்துவிட்டு தமிழகத்தின் ஊடக வரலாற்றை எழுத முடியாது: தீக்கதிர் குமரேசன் 

Published on 12/10/2018 | Edited on 12/10/2018
theekkathir kumaresan



இனி தமிழகத்தின் ஊடக வரலாற்றை எழுதுகிற யாரும் ‘நக்கீரன்’ கோபாலையும் அக்டோபர் 9ம் தேதியையும் தவிர்த்துவிட்டு எழுத முடியாது. அப்படி எழுதினால் அது ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ என்பதாகத்தான் இருக்கும் என்று தீக்கதிர் குமரேசன் கூறியுள்ளார். 
 

ஆளுநர் மாளிகை அளித்த புகாரின் அடிப்படையில் நக்கீரன் ஆசிரியர் கைது செய்யப்பட்டு   10 மணி நேர சட்டப்போராட்டத்திற்கு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.  ஆசிரியரின் விடுதலை மூலம் பத்திரிகை சுதந்திரம் பாதுகாக்கப்பட்டது என்று ஊடகத்துறையினர் பாராட்டி வருகின்றனர்.  இந்நிலையில்,  சென்னை பெரியார் திடலில் ’‘பத்திரிகை சுதந்திர பாதுகாப்பும்,- பாராட்டும்’ எனும் தலைப்பில் 11.10.2018 வியாழக்கிழமை மாலை கூட்டம் நடைபெற்றது. 
 

இக்கூட்டத்தில் ‘தீக்கதிர்’ முன்னாள் ஊழியரான குமரேசன் பேசுகையில்,
 

இந்த வழக்கை வெற்றிகரமாகச் சந்தித்து ‘முன்விடுதலை’ பெற்றுள்ள நக்கீரன் கோபால், பேனா எடுக்கிறவர்கள், கேமரா தூக்குகிறவர்கள், மைக் பிடிக்கிறவர்கள் என்று ஊடகத்துறையினர் எல்லோருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறார். 
 

‘நக்கீரன்’ அலுவலகத்தில் செய்தி எழுதுகிறவர்கள், தட்டச்சு செய்கிறவர்கள், அச்சிடுகிறவர்கள் என்று அனைத்து ஊழியர்கள் மீதும் எப்ஐஆர் போடப்பட்டிருக்கிறது, அவர்களுக்கு முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அவர்களுக்கும் ஊடகத்துறையில் செயல்படுகிறவர்களுக்கும் உண்மைகளைத் துணிந்து எழுதினால் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. 
 

உண்மைகளைத் துணிந்து எழுதினால்தான் வெற்றி என்ற உறுதியும் ஏற்பட்டிருக்கிறது.
 

 இனி தமிழகத்தின் ஊடக வரலாற்றை எழுதுகிற யாரும் ‘நக்கீரன்’ கோபாலையும் அக்டோபர் 9ம் தேதியையும் தவிர்த்துவிட்டு எழுத முடியாது. அப்படி எழுதினால் அது ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ என்பதாகத்தான் இருக்கும்.


‘நக்கீரன்’ வெளியிட்ட அந்தக் கட்டுரையால் ஆளுநரின் எந்தப் பணி தடுக்கப்பட்டது என்பதே புரியவில்லை. மாவட்டங்களுக்குச் செல்வது, கோப்புகளைப் பார்ப்பது… எந்தப் பணி தடுக்கப்பட்டது? ஆனால், பத்திரிகையின் பணியைத் தடுக்க முயற்சி செய்யப்பட்டது. 
 

வேடிக்கை என்னவென்றால், பத்திரிகையின் அடுத்த இதழ் வெளிவராமல் தடுக்க முயன்றார்கள், இப்போதோ அந்த இதழ் அமோகமாக விற்பதற்கு வழி செய்திருக்கிறார்கள்.
 

தனக்குக் கிடைக்கிற ஒரு தகவலை மக்களுக்குத் தெரிவிப்பது ஊடக உரிமை, ஊடகக் கடமை. அந்தத் தகவலை எந்தக் கோணத்தில் வெளியிடுவது என்பதும் ஊடகத்தின் உரிமைதான். 
 

ஒரே நிகழ்வை ‘தீக்கதிர்’ ஒரு கோணத்தில் வெளியிடும், ‘இந்து’ இன்னொரு கோணத்தில் வெளியிடும், ‘நக்கீரன்’ வேறொரு கோணத்தில் வெளியிடும். பத்திரிகைச் சுதந்திரம் என்பது பத்திரிகை நடத்துகிறவர்களின் உரிமை மட்டுமல்ல, என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள மக்களுக்கு உள்ள அடிப்படை உரிமையுமாகும்.
 

ஒடுக்குமுறை நடவடிக்கைகளால் இந்த ஊடகப் பயணம் ஒருபோதும் நிற்காது. மாறாக, இவ்வளவு கேவலமாகப் பத்திரிகையை ஒடுக்க முயன்றார்கள், நீதிமன்றத் தீர்ப்பால் கேவலமான தோல்வியைச் சந்தித்தார்கள் என்பதுதான் நாளைய செய்தியாகும். திரும்பத் திரும்ப இப்படிப்பட்ட வழக்குகளில் ஆட்சியாளர்கள் தோல்வியைத்தான் சந்திக்கிறார்கள். 
 

நாடு முழுக்க இதுதான் நடக்கிறது. 
 

‘அர்பன் நக்சல்கள்’ எனக்கூறி இடதுசாரிச் சிந்தனையாளர்கள் ஐந்துபேர் கைதுசெய்யப்பட்டபோது, அவர்களைச் சிறையில் அடைக்க மறுத்த உச்சநீதிமன்றம் வீட்டுக்காவலில் வேண்டுமானால் விசாரித்துக்கொள்ளுங்கள் என்று மஹாராஷ்டிரா காவல்துறையிடம் சொன்னது. 
 

திரிபுரா மாநிலத்தில் வெளியாகும் எங்கள் இயக்கத்தின் பத்திரிகையான ‘தேசர் கதா’, சாதாரண ஒரு சட்டநுணுக்கத்தைச் சாக்கிட்டு பாஜக அரசால் முடக்கப்பட்டது. நீதிமன்றம் தலையிட்டு பத்திரிகை தொடர்ந்து வெளிவருவதை உறுதிப்படுத்தியிருக்கிறது. இப்போது இங்கே ‘நக்கீரன்’ மீதான நடவடிக்கையிலும் நீதிமன்றம் ஓங்கிக் குட்டியிருக்கிறது. ஆனால் ஆட்சியாளர்களோ தலையை லேசாகத் தடவிவிட்டுக்கொண்டு மறுபடியும் மறுபடியும் ஊடகச் சுதந்திரத்தை ஒடுக்க முயல்கிறார்கள்.
 

முகநூலில் இந்த நிகழ்வு பற்றிய எனது பதிவுக்கு எதிர்வினையாற்றியுள்ள ஒருவர், “இனிமேல் நக்கீரன் கட்டுரைகள் இந்துவில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகும் போல” என்று எழுதியிருக்கிறார். அவர்களுக்குத் தெரியாது, முன்பு இந்து ஏட்டின் ஒரு தலையங்கத்திற்காக அவைமீறல் வழக்குப் பாய்ந்தபோது, அந்தத் தலையங்கத்தைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட முடிவு செய்து வெளியிட்டோம். இந்துக்களின் கட்டுரைகள் நக்கீரன்களிலும் நக்கீரன்களின் கட்டுரைகள் இந்துக்களிலும் வெளிவருகிற தேவை ஏற்பட்டால் அதுவும் நடக்கும். அது ஆரோக்கியமான வளர்ச்சிதான்.
 

180 நாடுகளில் பத்திரிகைச் சுதந்திரத்தின் பாதுகாப்பு நிலை குறித்து ஆய்வு செய்துள்ள ‘எல்லைகள் தாண்டிய செய்தியாளர்கள்’ என்ற உலகளாவிய அமைப்பின் இவ்வாண்டு அறிக்கைப்படி, இந்தியா 138வது இடத்தில் இருக்கிறது. இதை 180வது இடத்திற்குத் தள்ளாமல் விடமாட்டோம் என்று சங்கல்பம் எடுத்துக்கொண்டது போல மத்திய பாஜக அரசும், தமிழக அதிமுக அரசும் செயல்படுகின்றன. 
 

நாடும் ஊடக உலகமும் அதை அனுமதிக்காது.


 நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று துணிந்து புறப்பட்ட நக்கீரப் பார்வையால் நெற்றிக்கண்கள்தான் பொசுங்கும், முக்கண் முதல்வர்கள்தான் பொசுங்குவார்கள், கருத்துச்சுதந்திரத்தைப் பொசுக்க நினைக்கும் சிவனார்கள்தான் பொசுங்குவார்கள்''. இவ்வாறு பேசினார். 
 

சார்ந்த செய்திகள்