Skip to main content

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியின் உதவிக்கரம்..!

Published on 01/06/2021 | Edited on 01/06/2021

 

Minister Mahesh Poyamozhi's help to children who have lost their parents

 

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி நாட்டாணிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ஒலி, ஒளி அமைப்பாளராக இருந்த பழனிவேல், கோமதி தம்பதிக்கு 10ஆம் வகுப்பு படிக்கும் சக்திவேல் என்ற மகனும் 6ஆம் வகுப்பு படிக்கும் சங்கவி என்ற மகளும் உள்ளனர். சந்தோசமான குடும்பம்.

 

சில வருடங்களுக்கு முன்பு கோமதிக்கு ரத்த புற்றுநோய் ஏற்பட்டு இறந்த நிலையில், பழனிவேலுக்கு மஞ்சள் காமாலை நோய் தாக்கி அவரும் உயிரிழந்தார். அடுத்தடுத்து தாய் தந்தையை இழந்து நின்ற இரு குழந்தைகளையும் அவர்களின் வயதான தாத்தா சுப்பிரமணியன் (75), பாட்டி அம்மாக்கண்ணு (60) ஆகிய இருவரும் வளர்த்துவருகிறார்கள். கஜா புயலில் குடியிருந்த வீடும் உடைந்துபோக, எஞ்சிய பகுதியில் வாழ்கிறார்கள். பேரக்குழந்தைகளுக்காக தன்னுடைய தள்ளாத வயதிலும் அரசுப் பள்ளி இரவு காவலராக வேலைசெய்து அந்த வருமானத்தில் மனைவி மற்றும் பேரக்குழந்தைகளுக்கு உணவளித்துவருகிறார்.

 

இந்நிலையில், கரோனா பாதிப்புகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள தஞ்சை மாவட்ட பொறுப்பாளரான அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் கவனத்திற்கு இந்த விஷயத்தை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் கொண்டு செல்ல, நேற்று (31.05.2021) பேராவூரணி அரசு மருத்துவமனை ஆய்விற்கு சென்ற அமைச்சர், பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்கைளையும் அவர்களை வளர்க்கும் தாத்தா பாட்டியையும் பார்க்க வேண்டும் என்று சொல்ல, உடனே மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர்.

 

குழந்தைகளை அணைத்து ஆறுதல் சொன்ன அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, உடனே உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை மூலம் ரூ. 40 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார். மேலும், புயலில் உடைந்த வீட்டிற்குப் பதிலாக அரசு வீடு கட்ட நிதி ஒதுக்கவும் உத்தரவிட்டார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் நிதி வழங்கிய அமைச்சருக்கு நன்றி சொன்னதோடு, தற்போது கரோனாவில் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்குத் தமிழக அரசு ரூ. 5 லட்சம் வழங்கும் திட்டத்தில் இந்தக் குழந்தைகளுக்கும் தமிழக முதலமைச்சர் நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்