
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு தவறான ஊசி போட்டதில் குழந்தையின் கை அழுகியதாகவும் அதன் காரணமாக குழந்தையின் கையை அகற்றப்படுவதற்கான அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியது. இதனால் குழந்தையின் பெற்றோர்கள் மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மீது குற்றச்சாட்டு தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''நானும் இந்த தகவல் கேள்விப்பட்ட உடனே சம்பந்தப்பட்ட அலுவலர்களை கேட்டேன். அந்த குழந்தை 32 வாரத்தில் பிறந்திருக்கிற குறை பிரசவத்தில் பிறந்திருக்கும் குழந்தை. பிறக்கும் பொழுதே ஏகப்பட்ட காம்ப்ளிகேஷன் உடன் பிறந்திருக்கிறது. அதற்கான சிகிச்சை அளித்திருக்கிறார்கள். ஊசி தவறுதலாக போடப்பட்டதா என்பது குறித்து மூன்று அலுவலர்களை வைத்து விசாரிக்க சொல்லி இருக்கிறேன். இன்னும் இரண்டு மூன்று நாட்களில் அதற்கான முடிவு வந்துவிடும். இரண்டாவது அந்த குழந்தையை உடனடியாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்க செய்து சிகிச்சை அளிக்க உத்தரவிட்டிருக்கிறோம்.

உண்மையிலேயே அந்த குழந்தைக்கான பாதிப்பை பெற்றோர்களும் அறிவார்கள். பெற்றோர்களிடத்தில் கல்லூரி முதல்வர் டீன் தேரணி ராஜன் 32 வாரத்தில் பிறந்த அந்த குழந்தைக்கு இருக்கக்கூடிய நோய் பாதிப்புகள் பற்றி எல்லாம் விளக்கியிருக்கிறார். இருந்தாலும் இந்த ஊசி போடும்போது ஏற்பட்டிருக்கிற இந்த பாதிப்பு சம்பந்தமாக விசாரிக்க சொல்லி இருக்கிறோம். விசாரணை முடிவில் யாராவது கவனக் குறைவாக இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் கவனக் குறைவுதான் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கு. யாருமே வேண்டுமென்று எந்த குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்த எந்த செவிலியரும் நினைக்க மாட்டார்கள், எந்த மருத்துவரும் நினைக்க மாட்டார்கள். எந்த மருத்துவமனையை சேர்ந்தவர்களாக இருந்தாலும் பாதிப்பு ஏற்படுத்துவதற்கு என்று பணிக்கு வருவதில்லை. அவர்களை பாதுகாப்பதற்காக தான் மருத்துவமனைக்கு வருகிறார்கள். எங்காவது கவனக்குறைவு ஏற்பட்டால் அந்த கவனக்குறைவுக்கும் அவர்கள் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்கிற வகையில் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இப்பொழுது விசாரிக்க சொல்லி இருக்கிறோம்'' என்றார்.