
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கல் கிராமத்தில் அருள்மிகு கயிலாதநாதர் உடனுறை உமாமகேஸ்வரியம்மன் (சிவன்) கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் கருவறையில் உள்ள மூலவர் உமா மகேஸ்வரி அம்மன் சிலையின் மார்பு பகுதியில் இருந்து (சொட்டு, சொட்டாக) பால் வடிந்ததாக கோயில் அர்ச்சகர் கூறியுள்ளார்.
இத்தகவல் காட்டுத் தீயாகப் பரவியதையடுத்து சுற்றுவட்டார கிராம மக்கள் திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் கூடி அம்மனை வழிபாடு செய்தனர். இதனால் அப்பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது. மேலும் இது குறித்து கோவில் அர்ச்சகர் கூறும்போது, 'கடந்த சில நாட்களாக அம்மன் சிலையில் இருந்து பால் வடிவதாகவும், அபிஷேகம் செய்த பால் என நினைத்து பத்து குடம் தண்ணீர் ஊற்றிய பின்பும் பால் தொடர்ந்து வடிந்ததாகவும், இதையடுத்து இதுகுறித்து கோவில் நிர்வாகத்திடம் தான் தெரிவித்ததாகவும். இது அம்மனின் அருள் எனவும் தெரிவித்தார். மேலும் ஏராளமான பெண்கள் அங்கு குவிந்து பக்தி பரவசத்துடன் அம்மனை வழிபட்டுச் சென்றனர்.