
தனியார் கல்லூரிகளில் ‘சீட்’க்காக மாணவர்களும் பெற்றோர்களும் அலைந்து திரிந்துகொண்டிருக்கும் நேரமிது. சிறுபான்மை மக்களுக்காக ‘சீட்’ கொடுக்கிறோம் என்று ஆரம்பிக்கப்பட்ட சிறுபான்மை கல்லூரிகள் உண்மையிலேயே சிறுபான்மை மாணவர்களுக்கு ‘சீட்’ வழங்குகிறார்களா என்பது கேள்விக்குறிதான்.

காரணம், ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் கமிஷன் வாங்கிக்கொண்டு சொல்லும் நபர்களுக்கே பெரும்பாலும் ’சீட்’ ஒதுக்கப்படுவது எழுதப்படாத விதி. அதுவும், சென்னையிலிருந்து மிக அருகாமையிலுள்ள தாம்பரம் எம்.சி.சி. (Madras Christian College) சிறுபான்மை கல்லூரியில், “அ.தி.மு.க. பிரமுகர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் சொன்னால்தான் சீட்” என்று அக்கல்லூரியின் முதல்வர் அலெக்ஸாண்டரின் பி.ஏ. சுதாகர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கும் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, நம்மிடம் பேசும் சிறுபான்மை மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் பேராயர் சாம் ஜேசுதாஸ், “சிறுபான்மை கல்லூரிகள் என்றால் 35 சதவீத சீட்டுகள் அரசாங்கத்திற்கும் 65 சதவீத சீட்டுகளை சிறுபான்மை மக்களுக்காகவும் ஒதுக்கவேண்டும். இதன்மூலம் ஏழை எளிய கிறிஸ்துவ மற்றும் தலித் மாணவர்களின் வாழ்க்கைத்தரம் உயரும் என்ற நோக்கத்தில்தான் அரசாங்கம் இப்படிப்பட்ட சலுகைகளை வழங்கியிருக்கிறது.

ஆனால், பெரும்பாலான சிறுபான்மைக் கல்லூரிகள் சிறுபான்மை மக்களுக்காக ‘சீட்’ கொடுக்கிறார்களா என்ற வெளிப்படைத்தன்மையே இல்லை. அரசியல்வாதிகள் கொடுக்கும் பட்டியலை அப்படியே சேர்த்துக்கொள்ள சிறுபான்மை அந்தஸ்தை ஏன் வழங்கவேண்டும்? அரசாங்கம் அதற்கான சலுகைகளை ஏன் வழங்கவேண்டும்?
உண்மையிலேயே யார் யாருக்கு வழங்கியிருக்கிறோம் என்கிற பட்டியலை சிறுபான்மைக்கல்லூரிகள் நோட்டீஸ் போர்டில் ஒட்டவேண்டும். அப்படிச்செய்யாமல் அரசியல்வாதிகளும் அதிகாரவர்க்கத்தினரும் சொல்லுபவர்களுக்கு சீட் வழங்கினால் சிறுபான்மை அந்தஸ்தையே ரத்து செய்யவேண்டும்” என்கிறார் கோரிக்கையாக.
- வெற்றிவேந்தன்