Skip to main content

“லஞ்சம் லஞ்சம்... எதற்கெடுத்தாலும் லஞ்சம்..” - வீடியோ வெளியிட்டுக் குமுறும் இளைஞர்

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
man released video  bribes are taken for whatever  Tehsildar  office

நெல்லையைச் சேர்ந்த நபர் ஒருவர் கூட்டுப் பட்டாவில் பெயர் சேர்க்க தாசில்தார் அலுவலகம் சென்றிருக்கிறார். அங்கு அவரிடம் ஒரு லட்சம் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கும் என்று அதிகாரிகள் கூறியதாகச் சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக அந்த நபர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “தமிழக முதல்வர் அவர்களே வருவாய்த் துறையில் நடக்கும் அநியாயத்தைப் பாருங்கள். எதற்கெடுத்தாலும் லஞ்சம்; லஞ்சம் இல்லாமல் தாசில்தார் அலுவலகத்திற்குள் கால் வைக்கவே முடியாது. அவ்வளவு லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. பட்டாவில் சிறிய மாறுதல் செய்ய 50 ஆயிரம் கொடு, ஒரு லட்சம் கொடுன்னு கசக்கி பிழிகிறார்கள்.

நான் ஒரு கூட்டுப் பட்டாவில் பெயர் சேர்ப்பதற்காக விண்ணப்பித்திருந்தேன். அதற்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால் மாற்றித் தருகிறோம் என்கின்றனர். நான் பணம் எல்லாம் தரமாட்டேன்; என்னிடம் அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கிறது என்று கேட்டதற்கு, நீ எங்க வேண்டுமானாலும் செல் என்கிறனர். 

இது தொடர்பாக ஏகப்பட்ட மனு கொடுத்து, ஒரு வருடமா நடையா நடந்துகிட்டு இருக்கிறேன். ஆனால் இதுவரை எந்த மனுவுக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை. ரூ.1 லட்சம் லஞ்சமாகக் கொடுத்திருந்தால் ஒரு மணி நேரத்தில் எல்லாவற்றையும் முடித்துக் கொடுத்திருப்பார்கள். தயவு செய்து லஞ்சத்தைச் சட்டமாக்குங்கள்; லஞ்சம் கொடுத்தால்தான் இது முடியும் என்று கூறிவிட்டீர்கள் என்றால், நான் லஞ்சம் கொடுத்துவிட்டுப் போய்விடுவேன். ஆனால் நீங்கள் லஞ்சம் கொடுத்தால் தவறு என்கிறீர்கள். ஆனால் லஞ்சம் கொடுக்காமல் வேலையே நடைபெறுவதில்லை.

முதல்வரே தயவு செய்து பதிவுத்துறை அல்லது வருவாய்த்துறை இரண்டில் எதாவது ஒன்றை மட்டும் வையுங்கள்; எங்களால் இரண்டையும் சமாளிக்க முடியவில்லை. கடன்வாங்கி இடத்தை வாங்குனா, இவர்களுக்கு லஞ்சம் கொடுத்து மாளமுடியவில்லை. லஞ்சத்தைச் சட்டமாக்குங்கள்; இல்லையென்றால் இவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்” என மன வேதனையில் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

லஞ்சம் வாங்கிய பெண் வருவாய் ஆய்வாளர் கைது

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
Female revenue inspector arrested for taking bribe

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த இறையூர் பகுதியில் பெண் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் பாரதி. இவர் மேல் நாச்சி பட்டு பகுதியைச் சேர்ந்த பழனிசாமி என்ற முதியவரிடம் வாரிசு சான்றிதழ் வழங்குவதற்காக 1000 ரூபாய் லஞ்சம் கேட்ட நிலையில், விவசாயி திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன் பேரில் திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பு லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் வேல்முருகன் தலைமையில் உதவி ஆய்வாளர் கோபிநாத் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரசாயனம் கலந்த பணத்தை பழனிசாமியிடம் கொடுத்துள்ளனர். இதையடுத்து நேற்று பழனிசாமி பெண் வருவாய் ஆய்வாளர் பாரதியிடம் கொடுத்திருக்கிறார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புதுறை போலீசார், பாரதியை கையும் களவுமாக பிடித்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட பெண் வருவாய் ஆய்வாளரிடம் செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து   விசாரணை மேற்கொண்டனர்.

Next Story

ரூ.2000 லஞ்சம்; கையும் களவுமாக சிக்கிய அதிகாரி

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
Electricity Board official arrested for bribe Rs.2000 lakh

திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுக்கா கவரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி மகன் தங்கராசு(45). இவருக்கு சொந்தமான 5 ஏக்கர் பூர்வீக நிலத்தினை இவரும் இவரது அண்ணனும் சரி பாதியாக பிரித்து அதில் விவசாயம் செய்து வருகின்றனர். இவரது அண்ணன் கணேசனுக்கு பிரிக்கப்பட்ட பங்கில் விவசாயக் கேணி உள்ளது. 

தங்கராசுக்கு பிரிக்கப்பட்ட நிலத்தில் ஆழ்துளை கிணறு உள்ளது. ஆழ்துளை கிணற்றுக்கும் கேணிக்கும் சேர்த்து ஒரு இலவச விவசாய மின் இணைப்பு மட்டும் உள்ளது. ஒரு இலவச மின் இணைப்பு பெற்று இரண்டு இடங்களிலிருந்து தண்ணீர் எடுப்பதாக மின்வாரியத்துக்கு வந்த புகாரின் பேரில் மின்வாரிய அதிகாரிகள் விசாரணை செய்து தங்கராசுவுக்கு அபராதம் விதித்து வசூல் செய்துள்ளனர். மேலும் தங்கராசு தனியாக பயன்படுத்தி வந்த மின் இணைப்பினைக் கடந்த 7.6.2024 அன்று வணிக பயன்பாட்டுக்கும் மாற்றி உள்ளனர்.

பின்பு கடந்த 25 ஆம் தேதி தங்கராசுவின் தொலைபேசிக்கு AD பேசுகிறேன் என்று சொல்லி உன் மீது சுமதி என்பவர் புகார் கொடுத்துள்ளார். நீ தொட்டியம் ஆபீசுக்கு வந்து என்னை பார் என்று கூறியுள்ளார்.  அதன் பேரில் மறுநாள்(26. 6 .2024) மதியம் 3 மணியளவில் தொட்டியத்தில் உள்ள மின்வாரிய அலுவலகம் சென்று  அங்கிருந்த ஏ.டி திருமாறன் என்பவரை சந்தித்துள்ளார். அப்போது ஏ.டி திருமாறன் உனக்கு டேரிஃப் சேஞ்ச் பண்ணிக் கொடுத்ததற்கும் நீ எனக்கு எதுவும் தரல, இப்ப சுமதி என்பவர் உன் மேல புகார் கொடுத்து இருக்காங்க. அந்தப் புகார உனக்கு சாதகமாக எழுதி அனுப்ப வேண்டும். அதனால எனக்கு 2000 ரூபாய் கொடுத்துவிடு என்று கேட்டுள்ளார்.  

அதற்கு தங்கராசு பணம் தயார் செய்து கொண்டு உங்களை வந்து பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்துள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத தங்கராசு திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறையில் அளித்தப் புகாரின் பேரில் டி.எஸ்.பி மணிகண்டனின் ஆலோசனையின் பேரில் இன்று(2.7.2024) மதியம் சுமார் ஒன்றரை மணி அளவில் தொட்டியம் ஏடி திருமாறன் தங்கராசுவிடம் இருந்து 2000 ரூபாய் லஞ்சப் பணத்தை கேட்டுப் பெற்ற போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் டிஎஸ்பி மணிகண்டன் ஆய்வாளர்கள் சக்திவேல், பாலமுருகன், பிரசன்ன வெங்கடேஷ் அடங்கிய குழுவினர் ஏடி திருமாறனை கையும் களவுமாக பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.