
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகில் உள்ளது சேதுவராய நல்லூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகள் ரூப லட்சுமி(12) ஊருக்கு அருகிலுள்ள நெகனூர் புதூர் அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை அவரது பெற்றோர் வெளியூர் சென்றிருந்த நேரத்தில் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அப்போது ரூப லட்சுமி தனது தாயின் சேலையை எடுத்து வீட்டில் ஊஞ்சலுக்காகப் பொருத்தப்பட்டிருந்த இரும்பு வளையத்தில் சேலையால் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்தார். அப்படி விளையாடும் போது எதிர்பாராதவிதமாக அந்த சேலை சிறுமி கழுத்தில் இறுக்கி மயக்கமடைந்து கீழே விழுந்து கிடந்துள்ளார். வெளியே சென்றிருந்த அவரது பெற்றோர்கள் இருவரும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது ரூப லட்சுமி மயங்கிக் கிடந்தது தெரியவந்தது. அவரை உடனடியாக செஞ்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்தனர். அங்குப் பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்..