கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதி மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தையானது கூண்டு வைத்து வனத்துறையால் பிடிக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள இஸ்லாம்புதூர் பகுதியில் இரண்டு ஆண்டுகளாக தனியாருக்கு சொந்தமான ரிசார்ட் பகுதியில் சிறுத்தை புலி ஒன்றின் நடமாட்டம் இருந்து வந்தது. அந்த பகுதியில் உள்ள ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை தாக்குவது அந்த பகுதி மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. தொடர்ச்சியாக அந்த சிறுத்தையை பிடிக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக வனத்துறையினர் சிறுத்தை புலியைப் பிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். சிறுத்தை புலி நடமாட்டம் இருக்கும் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டதோடு, அதனைப் பிடிக்க கூண்டும் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று இரவு வனத்துறையினரால் வைக்கப்பட்ட கூண்டில் சிறுத்தை புலி சிக்கியது. இதனால அந்த பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.