Skip to main content

பெண்ணுடன் தனிமையில் இருந்த வக்கீல்... நள்ளிரவில் குடும்பத்தினர் செய்த பயங்கரம்!

Published on 20/07/2021 | Edited on 20/07/2021
The lawyer who was alone with the woman ... the horror that happened at midnight

 

சென்னை மதுரவாயல் பி.டி.ஐ.நகர், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(36). இவருடைய மனைவி சத்யா(30). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் - மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சத்யா தனது கணவரிடம் இருந்து விவகாரத்து பெறுவதற்காக திருவள்ளூரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றார். அப்போது திருவள்ளூர் கோர்ட்டில் வக்கீலாக பணிபுரியும் திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் வெள்ளேரிதாங்கல் கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு வெங்கடேசன்(37) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் வழக்கு சம்பந்தமாக அடிக்கடி நேரில் சந்தித்துப் பேசி வந்தனர்.

 

நாளடைவில் இது காதலாக மாறியது. இதையறிந்த சத்யாவின் பெற்றோர், வக்கீலுடனான காதலைக் கைவிடும்படி அவரை கண்டித்தனர். ஆனால் அதற்கு மறுத்த சத்யா, கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவள்ளூரை அடுத்த காக்களூர் ஆஞ்சநேயபுரம் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தனியாகத் தங்கினார். நேற்று இரவு வழக்கம்போல் சத்யாவை சந்திக்க அவரது வீட்டுக்கு வக்கீல் வெங்கடேசன் வந்தார். இதுபற்றி தகவல் அறிந்தும் சத்யாவின் தந்தை சங்கர்(54), தாய் சென்னம்மாள்(47), தங்கை சங்கீதா(27), தம்பி வினோத்குமார்(26), சங்கீதாவின் கணவர் வெங்கடேஷ்(30) மற்றும் சித்தி தேவி(38) ஆகியோர் சத்யாவின் வீட்டுக்கு நள்ளிரவு 12 மணியளவில் வந்தனர். அப்போது வக்கீல் வெங்கடேசனும், சத்யாவும் ஒரே வீட்டில் தனியாக இருப்பதைக் கண்டு ஆத்திரம் அடைந்தனர்.

 

இதனால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சத்யாவின் தாய், தந்தை உள்பட ஆறு பேரும் வக்கீல் வெங்கடேசனையும் சத்யாவையும் கத்தியால் சரமாரியாக வெட்டினார்கள். இதில் பலத்த வெட்டுகாயமடைந்த வக்கீல் வெங்கடேசன் ரத்த வெள்ளத்தில் மயங்கினார். இதனால் இருவரும் இறந்துவிட்டதாகக் கருதி ஆறு பேரும் வீட்டை வெளிப்புறமாக பூட்டிவிட்டு தப்பிச்சென்றுவிட்டனர். மயக்கம் தெளிந்து எழுந்த சத்யா, அலறினார். அவரது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், திருவள்ளூர் வட்டம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், வெங்கடேசன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்குப் போராடிய சத்யாவை திருவள்ளூரில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

 

இந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் தாலுகா போலீஸார் வழக்குப்பதிவு செய்து சத்யாவின் தந்தை சங்கர், அவரது தாயார் சென்னம்மாள், தம்பி வினோத்குமார், தங்கை சங்கீதா, அவருடைய கணவர் வெங்கடேஷ், சித்தி தேவி ஆகிய 6 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கொலையான வக்கீல் வெங்கடேசனுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இதற்கிடையில் நேற்று காலை வக்கீல் வெங்கடேசன் கொலையைக் கண்டித்து திருவள்ளூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த திரளான வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்