Skip to main content

“தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்து விட்டது” - ராமதாஸ் குற்றச்சாட்டு

Published on 04/05/2024 | Edited on 04/05/2024
 Ramadas allegation Law and order has completely broken down in Tamil Nadu

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் தனசிங் (வயது 60). இவர் காங்கிரஸ் கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவராக இருந்து வந்தார். தொழிலதிபரான ஜெயக்குமார் தனசிங் நேற்று முன்தினம் (02.05.2024) வெளியே சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் எனப் பலரும் பல இடங்களிலும் தேடிப் பார்த்துள்ளனர். அப்போதும் ஜெயக்குமார் கிடைக்கவில்லை. இதனையடுத்து அவருடைய மகன் கருணையா ஜப்ரின் (வயது 28) உவரி காவல்துறையில் இது தொடர்பாக புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், காணாமல் போன ஜெயக்குமாரைத் தீவிரமாக தேடி வந்தனர். காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இத்தகைய சூழலில் ஜெயகுமார் கரைச்சுத்து புதூரில் உள்ள வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் உடல் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த 3 தனிப்படைகள் அமைத்து திருநெல்வேலி எஸ்.பி.சிலம்பரசன் உத்தரவிட்டுள்ளார். மேலும் ஜெயக்குமார் தனசிங் உடல் மீட்கப்பட்ட இடத்தில் எஸ்.பி. சிலம்பரசன் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அதே சமயம் ஜெயக்குமார் தனசிங்கின் உடல் இருந்த இடத்தில் மோப்பநாய் உதவியுடன் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த நிலையில், நெல்லை மாவட்ட  காங்கிரஸ்  தலைவர் ஜெயக்குமார் படுகொலை, சட்டம் ஒழுங்கு செயலிழந்து விட்டதாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெயக்குமார் தனசிங், கடத்திச் சென்று அவருக்கு சொந்தமான தோட்டத்தில் எரித்து படுகொலை செய்யப்பட்டிருப்பது  அதிர்ச்சி அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் தனசிங்கின் படுகொலைக்கு காவல்துறையின் அலட்சியம் தான் காரணம் ஆகும். தமது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதியே நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் எழுத்து மூலம் ஜெயக்குமார் புகார் அளித்துள்ளார். ஒரு கட்சியின் மாவட்டத் தலைவராக இருப்பவர் புகார் அளிக்கும் போது அதனடிப்படையில் அடுத்த நிமிடமே காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்ய காவல்துறை தவறி விட்டது.ஜெயக்குமார் விவகாரத்தில் மட்டுமின்றி, அனைத்து விவகாரங்களிலும் இதே அலட்சியத்துடன்தான் காவல்துறை செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்து விட்டது என்பதற்கு நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கடத்தி படுகொலை செய்யப்பட்டது தான் எடுத்துக் காட்டு ஆகும்.

ஜெயக்குமார் படுகொலைக்கு காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள மக்களிடம் ஒருவித அச்சம் நிலவுகிறது. ஜெயக்குமார் படுகொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும். அதன்மூலம் மக்கள் மத்தியில் இழந்த நம்பிக்கையை காவல்துறை மீட்டெடுக்க வேண்டும்; மக்களிடம் நிலவும் அச்சத்தைப் போக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்