Skip to main content

சிபிஐ விசாரணையின் மூலம் குட்கா ஊழல் - லஞ்ச பேர்வழிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்: மு.க.ஸ்டாலின்

Published on 26/04/2018 | Edited on 26/04/2018


சிபிஐ விசாரணையின் மூலம் குட்கா ஊழல் - லஞ்ச பேர்வழிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு முழுவதும் நன்கு அறிந்து வைத்திருக்கும் ‘குட்கா’ விவகாரத்தில், சி.பி.ஐ. விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை வரவேற்கிறேன். தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் தொடர்ந்த இந்த வழக்கில், லஞ்ச ஒழிப்புத் துறையிடமிருந்த விசாரணையை சுதந்திரமாகவும், நேர்மையாகவும், நியாயமாகவும் விசாரணை நடைபெறவேண்டும் என்ற காரணத்தால், சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

இதன்மூலம், ஊழல் - இலஞ்ச பேர்வழிகள் கடுமையாக தண்டிக்கப்பட்டு, சட்டப்படியான நியாயம் நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது.

 

தடை செய்யப்பட்ட போதைப் பொருளான குட்காவை சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்கு ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அனுமதித்து, அதற்காக மாதந்தோறும் லஞ்சம் பெற்றுக் கொண்டதாக குட்கா முதலாளிகளின் டைரியிலேயே இடம்பெற்றுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை இயக்குநர் டி.கே.ராஜேந்திரன் ஆகிய இருவரையும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதவிநீக்கம் செய்து, முழுமையான – உண்மையான - விரைவான விசாரணை நடைபெற தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்