Skip to main content

பிரச்சனைகளுக்குக் காரணம் சாமி குத்தமா? அணுமின் நிலையத்தை மிரட்டும் யானைக்கல் பாறை!

Published on 11/05/2020 | Edited on 11/05/2020

 

Aanaikkal Paarai



"அதை உடைக்காதீங்க! உடைக்காதீங்க! என பல தடவை மன்றாடியும் பலனில்லாமல் உடைச்சீங்க.! அது சும்மா விட்டுச்சா? இப்ப நடக்கின்ற அத்தனை பிரச்சனைகளுக்கும் காரணம் அந்த பாறையை உடைச்சதனால் வந்த தெய்வ குத்தமே" என கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு புதியதோர் காரணத்தை அவ்வூரை சேர்ந்த முருக பக்தர்கள் முன் வைத்த நிலையில், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தாலுகாவிலுள்ள கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டின் ஒத்துழைப்போடு அணுவினை பிளந்து அதன் மூலம் மின்சாரம் தயாரிக்கும் கடந்த பல வருடங்களாக நடைப்பெற்று வருகின்றது. வெறும் அணு உலை மட்டுமல்லாது இந்தப் பகுதியினை அணு உலை பூங்காவாக மாற்ற ஆறு கட்டங்களில் கட்டுமானப் பணிகள் நடைப்பெற்று வருகின்றன. இந்தக் கட்டுமானப் பணிகளை செய்து வருவது லார்சன் டர்போ நிறுவனம். கடலிலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் அதாவது மூன்று மற்றும் நான்காம் பகுதிகளினை யொட்டி யானை ஒன்று அமர்ந்திருப்பது போல் பாறை ஒன்று இயற்கையாகவே அமைந்திருக்க, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டம்  மற்றும் உள்ளூர் மக்கள் அதனை வணங்கி வருவது வழக்கம். அணுமின் நிலைய விரிவாக்கப் பணிகளில் இது உடைபடும் என்பதால், மக்கள் இதனை உடைக்கக் கூடாது என்று போர்க்கொடி உயர்த்திய நிலையில், கடந்த மார்ச் 8ம் தேதி அந்தப் பாறையை உடைத்து தகர்த்துள்ளது ஒப்பந்தம் எடுத்துள்ள லார்சன் டர்போ எனப்படும் L & T நிறுவனம்.

 

 


இது தெய்வ குத்தம் என அனைத்து ஆன்மீக அன்பர்களும் குற்றஞ்சாட்டிய நிலையில் தொழிலாளர் பிரச்சனை, வழக்குகள், வன்முறை என தடுமாறி வருகின்றது கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம். இவ்வேளையில்,  “யானைக்கல் பாறை அது வெறும் பாறை அல்ல. அது எங்கள் வழிபாட்டு தெய்வம், எங்கள் நம்பிக்கை, புராதான சின்னம் என மக்கள் கோரிக்கை வைத்தும் கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாது பல தடங்கள்களையும் மீறி மார்ச் 8ம் தேதி யானைக்கல் பாறையை உடைத்தது. அதன் பின்னர், நடக்கின்ற சம்பவங்களை பார்த்தால் கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம் பல குளறுபடிகளையும், சிக்கல்களையும், பல பிரச்சனைகளையும் சந்தித்து வருகின்றது. இதற்கு காரணம்! தெய்வீக யானைக்கல் பாறையை தொட்டதே.! இதனால் L&T கம்பெனியும் சொல்லொண்ணா துயரத்தை அடைந்து வருவதும் எங்களுக்கு தெரியவருகின்றது. மக்களின் இறை நம்பிக்கை, தெய்வ சக்தியோடு விளையாடாதீர்கள். பின் வினையை அனுபவிப்பீர்கள். கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம் தனது தவறை உணரவேண்டும். திருச்செந்தூர் முருகப் பெருமான் பவனி வந்த யானை பாறையாக மாறியதாகவே மக்கள் இன்றுவரை நம்பி வணங்கி வருகின்றனர். அந்த தெய்வீக யானைக்கல் பாறையை மீண்டும் அதே இடத்தில் நிறுவப்பட வேண்டும். அவ்விடத்தை ஒரு கோவிலாக கட்டி பராமரிக்க வேண்டும். எம் பெருமான் திருச்செந்தூர் முருகன் திருவருளால் அனைவரும் காக்கப்படுவோம்." என கூடங்குளம் தொடங்கி மாவட்டம் ஆன்மிக அன்பர்களிடம் வைரலாக பரவி வருகின்றது.


 

 

Aanaikkal Paarai


 

கூடங்குளத்தினை சேர்ந்த சமூக ஆர்வலர் ரவியோ., "முருகன் - வள்ளி, தெய்வானை திருமணத்தில் கன்னியாகுமரியில் மச்சேந்திரன் எனும் பரத மன்னனின் மகளான பிறந்த தெய்வாணையை திருமணம் செய்ய திருவிளையாடல்கள் நடத்தும் நோக்கில் இந்திரனின் ஐராவதம் யானையில் வைத்து தெய்வாணையை அழைத்து வருகின்றார் முருகக் கடவுள். கூடங்குளம் அருகில் இடிந்தகரை வரும் பொழுது ( புராணத்தில் விடிந்த கரை ) சூரியன் உதித்து இரவுப் பொழுது விடிந்ததால் யானையை அங்கேயே நிறுத்தி வைத்து விட்டு, தெய்வாணைய அழைத்துக் கொண்டு மயில் மீது திருச்செந்தூர் சென்று விடுவார் கடவுள். அந்த ஐராவத யானையே கல்லாக மாறி யானைக்கல் பாறையாய் மாறியது. மாசித்திருவிழாவின் 8ம் நாள் விழாவும், ஆனி மற்றும் ஆடி மாதக் கடைசி வெள்ளிக் கிழமைகளில் இங்கு குளித்து யானைக்கல் பாறைக்கு பூஜை புனஸ்காரங்களை செய்வோம். இப்பொழுது அதற்கு வழியில்லாமல் போய்விட்டது. புனித இடம் அருகில் ஐந்து கிமீ சுற்றளவில் எந்த கட்டிடமும் இருக்கக் கூடாது என்பது உள்ளிட்ட விதிகளையும் அளித்து எத்தனையோ தடவை மன்றாடி பார்த்துவிட்டோம். இப்பொழுது அதனை உடைத்து விட்டனர். அந்த குத்தம்தான் அவங்களை பாடாய் படுத்துது." என்கிறார் அவர். பிரச்சனைகளுக்குக் காரணம் சாமி குத்தமாக  இருக்குமோ..? என பட்டிமன்றத்தை துவங்கி விட்டனர் ஏனைய பொது மக்கள். 

 

 

சார்ந்த செய்திகள்