Skip to main content

'கிணற்றில் கிடந்த கத்தி...' - விசாரணையைத் தீவிரப்படுத்தும் காவல்துறை!

Published on 10/05/2024 | Edited on 10/05/2024
 'Knife lying in the well...' - Police intensifying the investigation

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் தனசிங் (வயது 60). நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவரான ஜெயக்குமாரை தீவிரமாக தேடி வந்தனர். இத்தகைய சூழலில் ஜெயக்குமார் கரைச்சுத்து புதூரில் உள்ள வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் உடல் பாதி எரிந்த நிலையில் 04.05.2024 அன்று சடலமாக மீட்கப்பட்டார். ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து இந்த வழக்கில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜெயக்குமார் தனசிங்கின் மரண வழக்கில் அவரது செல்போனை கிணற்றுக்குள் தேடும் பணி 2 வது நாளாக தொடர்ந்து வருகிறது. ஜெயக்குமாரின் செல்போன் அவரது தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கிணற்றில் கிடக்கலாம் என்ற அடிப்படையில் கிணற்று நீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது. நேற்றிரவு பணியாளர்களைக் கொண்டு கிணற்றுக்குள் 7எச்.பி. நீர் மூழ்கி மோட்டாரை இறக்கி கிணற்று நீரை வெளியேற்றும் பணி தொடங்கியது.

அதன்படி சுமார் 17 மணி நேரத்திற்கு மேலாக கிணற்று நீரை நீர் 7 குதிரைத் திறன் (H.P.) கொண்ட மூழ்கி மோட்டார் மூலம் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. கிணற்றுக்குள் 4 பக்கங்களிலும் உள்ள நீரூற்றுகள் இருப்பதால் நீரை வெளியேற்றுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் சுமார் பதினேழு மணி நேரத்திற்கு மேலாகியும் கிணற்று நீரை இன்னும் முழுமையாக வெளியேற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இந்தநிலையில் தற்போது கிணற்றிலிருந்து கத்தி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கத்தி அவரை கொலை செய்ய பயன்படுத்தப்பட்டதா? எங்கு வாங்கப்பட்டது என்பது தொடர்பாக தற்போது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்