கடைக்குட்டி சிங்கம் படம் பார்க்க போன நண்பர்களுக்குள் திடீரென்று தகராறு ஏற்பட்டது. இதல் நண்பனை பீர் பாட்டிலால் அடித்து கொன்றவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஜீவா நகரை சேர்ந்த மாணிக்கம் (வயது 22), அதே பகுதியை சேர்ந்த சிவா (22) ஆகிய இருவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் கூலித்தொழில் செய்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் காவேரிப்பட்டணத்தில் உள்ள தியேட்டர் ஒன்றில் “கடைகுட்டி சிங்கம்” படம் பார்க்க சென்றனர். அவர்கள் படம் பார்த்து கொண்டிருந்த போது திடீரென்று மாணிக்கத்திற்கும், சிவாவிற்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
அப்போது 2 பேரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். அந்த நேரம் ஆத்திரம் அடைந்த சிவா தான் வைத்திருந்த பீர் பாட்டிலை உடைத்து மாணிக்கத்தின் கழுத்தில் குத்தினார். இதில் மாணிக்கம் அலறி துடித்தார். நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து சிவா அங்கிருந்து ஓடி விட்டார்.
தியேட்டரில் உள்ளவர்கள் மாணிக்கத்தை மீட்டு சிகிச்சைக்காக காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மாணிக்கம் இறந்தார்.
இந்த கொலை தொடர்பாக சிவாவை காவேரிப்பட்டணம் போலீசார் கைது செய்தனர். போலீசார் விசாரணையில், தன்னை மாணிக்கம் பட்டப்பெயர் சொல்லி கூப்பிட்டு கேலி-கிண்டல் செய்து வந்தான். இதனால் தனக்கு அவன் மீது ஆத்திரம் இருந்தது. தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்த போதும் அவ்வாறு கூறினான். இதனால் ஆத்திரத்தில் தான் மதுபாட்டிலை உடைத்து அவனது கழுத்தில் குத்தினேன் என்று அவர் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். கைதான சிவாவை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.