
ரம்ஜான் நோன்பு பண்டிகையான 14ம் தேதி ஊரடங்கை தளர்த்த வேண்டும் என நாகூர் தர்கா ஆதினாஸ்தர்கள் சங்கத் தலைவர் தமீம் அன்சாரி சாஹி தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் கரோனா பரவல் இரண்டாம் அலை வேகமெடுத்துள்ள நிலையில் வருகின்ற 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவை தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது ஒருபுறம் இருக்க நோன்பு கடைப்பிடித்து வரும் இஸ்லாமியர்களுக்கு வருகின்ற 14ம் தேதி ரம்ஜான் பண்டிகை அன்று மட்டும் தளர்வு வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை இஸ்லாமியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இது குறித்து சிறுபான்மை பாதுகாப்பு இயக்கத்தின் மாநிலத் தலைவரும், நாகூர் தர்கா ஆதினஸ்தர்கள் சங்கத்தின் தலைவருமான தமீம் அன்சாரி சாஹிப் கூறுகையில், “இஸ்லாமியர்களின் 5 கடைமைகளின் மூன்றாவது கடமையாக இருப்பது நோன்பு கடைப்பிடிப்பது.
இஸ்லாமியர்கள் நோன்பு கடைப்பிடித்து வருகின்றனர். 14ம் தேதி அன்று ரமலான் பண்டிகையைக் கொண்டாட காலை 6 மணியில் இருந்து 12 மணி வரை தளர்வு அளிக்க வேண்டும். ரமலான் நாளில் இஸ்லாமியர்கள் தங்களது தலையாய கடமையை நிறைவேற்ற கடைவீதிகளில் அத்தியாவசியப் பொருட்களை வாங்கும் வகையில் தளர்வு அளிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.