
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு அமைந்த உடன் தான் நீட் தேர்வும், உதய்மின் திட்டமும் வந்தது என திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி எம்.எல்.ஏ.வுமான ஐ.செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திண்டுக்கல்லில் உள்ள கலைஞர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த ஐ.பி.செந்தில்குமார், “பாராளுமன்ற தொகுதிகளை மறுவரை செய்ய வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து பலத்த எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது. மக்கள் தொகையை அடிப்படையாக கொண்டு தொகுதி வரைமுறை செய்ய வேண்டும் என்ற உள்நோக்கோடு மத்திய அரசு செயல்படுகிறது. அப்படி செய்யும் போது பாராளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை கூடும் என பா.ஜ.க. ஒன்றிய அறிவித்திருந்தாலும், அதிலும் குறிப்பாக அவர்களை எதிர்க்கின்ற மாநிலங்களில் பாராளுமன்ற தொகுதிகளை குறைக்க மறைமுகமாக செயல்பட்டு வருகிறது.
இதற்கு தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா உட்பட பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. கலைஞர் வழியில் வந்த முதல்வர் ஸ்டாலின் முன்கள வீரராக முதல் ஆளாக குரல் கொடுத்து தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என அவர் அறிவித்த அறிவிப்பு இன்று தென்னிந்தியா போராடும், தென்னிந்தியா வெல்லும் என்ற நிலைமையை உருவாக்கி உள்ளது. ஒன்றிய அரசு எப்போதெல்லாம் மக்களுக்கான அநீதிகளைச் சட்டங்கள் மூலமாகவும் அல்லது நலத்திட்டங்கள் மூலமாகவும் கொண்டு வரும் போது அதை எதிர்க்கின்ற திராணி உள்ள தைரியம் மிக்க தலைவராக நமது தமிழக முதல்வர் உள்ளார்.
தமிழகத்தில் 63 கட்சிகளை ஒன்றிணைத்து தொகுதி வரையறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கூட்டங்கள் நடத்தினார். அதில் 58 கட்சிகள் பங்கேற்றன. பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த அன்புமணி அவர்கள் கூட ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தில் பங்கேற்று இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றார். மக்கள் தொகையை அடிப்படையாக கொண்டு தொகுதி வரையறை செய்யப்படும் என ஒன்றிய பா.ஜ.க. அரசு அறிவித்துள்ளது. ஆனால் இதற்கு 30 வருடங்களுக்கு முன்பு மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு நடவடிக்கை எடுத்ததின் பயனாக தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் மக்கள் தொகையை கட்டுப்படுத்தியது.
அதேசமயம், வடமாநிலங்கள் இதை முறையாக செயல்படுத்தாததால் அங்கு மக்கள் தொகை அதிகரித்துள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் 36 சதவிகிதம் தமிழகம் மூலம் வளர்ச்சி அடையும் நிலைமை உள்ளது. 36 சதவிகிதம் ஜிஎஸ்டி வரியை மத்தியில் ஆளும் பா.ஜ.க. தலைமையிலான ஒன்றிய அரசிற்கு நாம் வழங்கினாலும் அவர்கள் நமக்கு கொடுப்பது 27சதவிகிதம் தான். ஆனால் வடமாநிலங்களான உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், பீகார், ஒரிசா ஆகிய மாநிலங்கள் ஒன்றிய அரசிற்கு 15 முதல் 20 சதவிகிதம் தான் கொடுக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு 45 சதவிகிதம் நிதியை கொடுக்கிறது. மணிப்பூர், இந்தியாவில் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலம். அந்த மாநிலத்தில் பா.ஜ.க. ஒன்றிய அரசு செய்த கொடுமைகள் அனைத்தையும் இந்தியா முழுவதும் உள்ள அனைவருக்கும் தெரியும். மணிப்பூர் போல் தென்னிந்தியாவை அழிக்க பா.ஜ.க அரசு நினைக்கிறது. அதன் முதல் கட்டம் தான் இந்தி மொழி திணிப்பு, வக்பு வாரிய சட்டத்திருத்தம்.
இது போல பல நிகழ்வுகளை தென்னிந்தியாவில் நடத்த பா.ஜ.க. அரசு திட்டமிட்டுள்ளது. இதை பொது மக்கள் உணரவேண்டும். பல்வேறு மொழிகள் பேசப்படும் மக்கள் இருந்தாலும் நாம் ஒன்றிணைந்து இது மண்ணின் பிரச்சனை மக்களுக்கான பிரச்சனை என்பதை கருத்தில் கொண்டு பா.ஜ.க. அரசின் சதித்திட்டங்களை முளையிலேயே கிள்ளி எரிய வேண்டும். அதற்கான பங்களிப்பும், ஒத்துழைப்பும் அவசியம் தொடர்ந்து இந்தியாவின் வளர்ச்சியிலும், பங்களிப்பிலும் தென்னிந்தியா முன்னிலையில் இருக்க வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒன்றிய அரசின் சதித் திட்டங்களை முறியடிக்க வேண்டும்.
அதுபோல் கலைஞர், மறைந்த அதிமுக முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை தமிழகத்தில் நீட் நுழைய முடியவில்லை. எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு அமைந்த உடன் தான் நீட் தேர்வும் வந்தது, உதய் மின் திட்டமும் வந்தது. இதன்மூலம் பாதிக்கப்பட்டது கிராமப்புற மாணவிகள் தான். 20 மாணவிகள் உயிரிழந்துள்ளனர். மின் கட்டண உயர்வால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் எடப்பாடி பழனிச்சாமி தான். அவருக்கு நீட் தேர்வை பற்றி பேச அருகதை இல்லை. குறிப்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினை பார்த்து கேள்வி கேட்க எந்த அருகதையும் இல்லை” என்றார்.
அதன்பின்னர் கொடைக்கானலுக்கு மாற்றுப்பாதை அமைப்பது குறித்து கேள்விகேட்டபோது, அதற்கான திட்டங்களை தமிழக அரசு தயாரித்து வருகிறது. இந்த வருடமே அதற்கான பணிகள் நடை பெறும்” என்று கூறினார்.
செய்தியாளர் சந்திப்பின் போது, இதில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர்கள் நாகராஜன், பிலால் உசேன், பொதுக்குழு உறுப்பினர்கள் அக்பர், கலைராஜன், மாநகர துணை மேயர் ராஜப்பா, மாநகர பொருளாளர் சரவணன், இலக்கிய அணி அமைப்பாளர் முருகானந்தம், விவசாய அணி அமைப்பாளர் இல.கண்ணன், திண்டுக்கல் கிழக்கு பகுதி செயலாளர் ராஜேந்திர குமார் உட்பட கட்சிப் பொறுப்பாளர்கள் பலர் இருந்தனர்.