Skip to main content

நல்லது கெட்டதிலும் உடனிருக்கும் காப்பீடு திட்டம்... ஈரோடு மாவட்ட காவல்துறைக்கு குவியும் பாராட்டு...

Published on 18/03/2020 | Edited on 18/03/2020

 

பணியின் போது இறக்கும் போலீசாரின் குடும்பத்திற்கு காவலர் குழு காப்பீட்டுத் திட்டம் மூலம் அக்குடும்பம் பொருளாதார சிக்கலைத் தீர்த்துக் கொள்ள முடியும் என்பதைத் தொடர்ந்து நிகழ்த்தி வருகிறது ஈரோடு மாவட்ட காவல் துறை.
 

ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் போலீஸ் நிலையத்தில் வேலை பார்த்து வந்த வரதராஜன் சென்ற வருடம் 11.11.19- அன்று கோபி - சத்தி  சாலையில் கரட்டடிபாளையம் அருகே  நடந்த சாலை விபத்தில் இறந்தார். இதேபோன்று ஈரோடு வடக்கு போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் தலைமைக் காவலராக வேலை பார்த்து வந்த செந்தில்குமார் சென்ற 20.11.19-ல்  ஈரோடு சத்தி ரோடு கனிராவுத்தர் குளம் அருகே நடந்த சாலை விபத்தில் இறந்தார்.

 

District Police



இப்படி சாலை விபத்தில் உயிரிழந்த இரண்டு காவலர்களின் குடும்பத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் துரித செயல்பாடு மூலமாக ஈரோடு பாரத ஸ்டேட் வங்கி   மூலம் காவலர் குழு காப்பீடு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா ரூ.30 லட்சம் பெறப்பட்டது.
 

இந்தத் தொகையை அந்தக் குடும்பத்தாருக்கு வழங்கும் நிகழ்ச்சி  கோவை  ஐஜி அலுவலகத்தில் நடந்தது.  விபத்தில் உயிரிழந்த வரதராஜன் மனைவி பாரதி மற்றும் செந்தில்குமார் மனைவி கலா ஆகியோருக்கு கோவை ஐஜி பெரியய்யா தலா 30 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.  ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன்,  பாரத ஸ்டேட் வங்கியின் மேலாளர் ஆகியோர் உடன் இருந்தனர்.
 

ஈரோடு மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் உயிரிழந்த காவலர்கள் குடும்பத்துக்கு இதுவரை ரூபாய் 1 கோடியே 20 லட்சம்  தொகை காவலர் குழு காப்பீடு திட்டத்தின் மூலம் அந்தந்த குடும்பங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இவை மட்டுமில்லாமல் இறந்தவர்களுக்கு  அரசால் வழங்கப்பட வேண்டிய அனைத்து பணப்பயன்களும் உடனடியாக அந்தக் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கனேசன் இதற்கென எடுத்த தனி முயற்சிதான் என்கிறார்கள் போலீசார். உயிரிழந்த போலீசார் குடும்பத்தினரிடம் பணத்தைப் பாதுகாப்பாகவும் உரிய முறையில் சேமித்துப் பயன்படுத்த ஆலோசனை வழங்கினார் எஸ்.பி. சக்தி கணேசன். 
 

காவல் பணியில் உள்ள போலீசாரை வேலை வாங்குவது மட்டும் ஒரு உயரதிகாரியின் வேலையல்ல உடன் பணியாற்றும் ஊழியர்களுக்கு நேரும் நல்லது கெட்டது என எதுவானாலும் உடனிருந்து முழுமையாக செய்வதும் இவர் போன்ற அதிகாரிகளின் பணி தான்.

 

 

 

சார்ந்த செய்திகள்