Skip to main content

யானையைக் கொன்று தந்தம் திருடிய கும்பல்; வனத்துறை தீவிர விசாரணை

Published on 10/05/2024 | Edited on 10/05/2024
 Forest department intensive investigation that   elephant and stole the ivory

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.  தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும் உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 24 ம் தேதி தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில்  வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது கும்டாபுரம் அருகே யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததைக் கண்டனர். இது பற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற அதிகாரிகள் கால்நடை  மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரோத பரிசோதனை செய்தனர். இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் என தெரிவித்தனர். மேலும், ஆண் யானையின் தந்தங்கள் வெட்டி எடுக்கப்பட்டது தெரியவந்தது.

யானையின் உடலை மற்ற விலங்குகளுக்கு உணவாக அப்படியே விட்டு விட்டனர். யானை தந்தத்தை திருடிய மர்ம நபர்களை பிடிக்க வனத்துறை சார்பில் 3 தனி படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். கும்டாபுரம் வனப்பகுதி தமிழக - கர்நாடக எல்லை பகுதியில் அமைந்துள்ளதால் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நபர்கள் யாராவது யானை தந்தத்தை வெட்டி எடுத்து இருக்கலாம் எனவும் தனிப்பட்ட அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் புலன் விசாரணை செய்து வந்தனர். அதிகாரிகள் விசாரணையை தீவிரப் படுத்தி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்