Skip to main content

அரசு பேருந்துகளுக்கு கீற்றுவிடும் போராட்டத்தை நடத்திய சிபிஎம் கட்சியினர்..

Published on 01/11/2019 | Edited on 01/11/2019

கும்பகோணம் கோட்டத்தில் இயங்கிவரும் பெரும்பாலான பேருந்துகள் மழைகாலங்களில் பயணிக்கும் பயணிகள் கையில் குடையுடனே செல்லவேண்டிய நிலையில் தான் இருக்கிறது. அந்த வகையில் திருப்புறம்பியம் மார்க்கத்தில் இயங்கும் அரசு பேருந்து ஒன்று மேற்கூரையே இல்லாமல் மழைநீர் உள்ளே புகுந்து பயணிக்கவே முடியாத அவல நிலையில் இருக்கிறது. அந்த கூறையை அடைக்க கோரி பேருந்தின் மேற்கூரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கீற்றுவிடும் போராட்டத்தை கும்பகோணம் அருகே உள்ள இன்னம்பூர் கிராமத்தில் நடத்தினர்.
 

innambur strike


தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் அரசு போக்குவரத்து கழகத்தில் கும்பகோணம் கோட்டத்தில் மட்டும் சுமார் 25 நகரப்பேருந்து இயங்கிவருகிறது. அதில் கும்பகோணத்திலிருந்து உட்கிராமமான பாபுராஜபுரம், இன்னம்பூர், கொத்தங்குடி, திருப்புறம்பியம், குடிதாங்கி வரை 5 நகர பேருந்துகள் இயங்கி வருகிறது.

இவை அனைத்து பேருந்துகளும் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட சென்னை - கும்பகோணம் மார்க்கத்தில் விடப்பட்டு பிறகு கும்பகோணம் - தஞ்சைக்கு விடப்பட்டு, பழைய இரும்புக்குக்கூட போட முடியாத அளவில் இறுதியாக நகரப் பேருந்துகளாக மாற்றப்பட்டு உட்கிராமங்களுக்கு இயக்கப்படுகிறது. பேருந்தின் இறுதி காலத்தில் கிராமப்பகுதியில் இயக்கப்படுவதால் மிகவும் பழுதான நிலையில் மழை நேரங்களில் பேருந்துக்குள் குடை பிடித்து செல்லும் அளவிற்கு மேற்கூரைகள் பழுதடைந்து ஓட்டை விழுந்து மழைநீர் பயணிகளை மேல் விழுகிறது. 

இதனால் அன்றாடம் பள்ளி, கல்லூரிகளுக்கு மற்றும் வேலைக்கு செல்லும் பயணிகள் பொதுமக்கள் மிகவும் அவதியடைகின்றனர். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பேருந்துகளை சீர் செய்யவும் புதிய பேருந்துவிடவும் கோரிக்கை  வைத்தனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் அன்மையில் பெய்த தொடர் மழையில் அப்பகுதி செல்லும் பேருந்துகளின் மேற்கூரைகள் முழுமையாக பழுதடைந்து மழை நீர் உள்ளே புகுந்து பயணிகள் மழையில் நனைந்தபடியே பேருந்தில் பயணிக்க வேண்டிய சூழ்நிலையிருந்து வந்தது.
 

innambur strike


இதை கண்டித்து சிபிஎம் கட்சியின் சார்பில் அரசுப் பேருந்துக்கு கீற்றுவிடும் போராட்டத்தை நடத்தினர். இதனை தொடர்ந்து நீண்ட நேரம் கழித்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்ட குழுவினருடன் போக்குவரத்து துறை அதிகாரிகளும் காவல்துறையினரும் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் பழுதுகளை நீக்கி பயணிகளுக்கு இடையூறு இல்லாமல் சரி செய்வதாகவும் புதிய நகரப்பேருந்து குறித்து சம்பந்தமாக மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பதாகவும் உறுதி அளித்தனர். இதனால் தற்காலிகமாக போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

சார்ந்த செய்திகள்