Skip to main content

‘ஜெய் பீம்’ படம் ஏற்படுத்திய தாக்கம்... முதலமைச்சர் உத்தரவும், சுற்றி சுழன்று குறையை தீர்க்கும் அமைச்சர்களும்!

Published on 15/11/2021 | Edited on 15/11/2021

 

The impact of the Jaybeam film; Chief Minister's order and ministers who turn around and resolve grievances!

 

‘ஜெய் பீம்’ திரைப்படம், இருளர் மக்களின் துயர வாழ்வை காட்சிப்படுத்தியது. இந்தப் படத்தைப் பார்த்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தனது மனதை பாதித்துவிட்டது எனத் தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி இருளர், குறவர் இனமக்கள் வாழும் பகுதிகளில் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆய்வுமேற்கொண்டு அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், அரசின் நலத்திட்டங்கள் சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

 

முதலமைச்சரின் இந்த உத்தரவுக்கு முன்புவரை, இருளர் இனமக்கள், நரிக்குறவர், குறவர், பூம்பூம் மாட்டுக்காரர்கள் ஆகியோர் அரசு அலுவலகங்களுக்குச் சென்றால் விரட்டியடிக்கும் நிலையும், புறக்கணிக்கும் நிலையுமே பெரும்பாலான அரசு அலுவலகங்களில் இருந்தது. அதற்கு அரசுத்துறை கூறிய காரணம், அவர்களிடம் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை போன்ற எந்த ஆவணமும் இல்லை என்பதே.

 

தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவுக்குப் பிறகு அதிகாரிகள், அமைச்சர்கள் தங்களது மாவட்டங்களில் புறக்கணிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்களைத் தேடித்தேடி உதவத் தொடங்கியுள்ளார்கள். இதற்காக அமைச்சர்கள், அதிகாரிகள் பம்மரமாய் சுற்றுகின்றனர்.

 

கைத்தறித்துறை அமைச்சர் இராணிப்பேட்டை காந்தி, கிருஷ்ணகிரி – தருமபுரி மாவட்டத்தின் பொறுப்பாளராக உள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியத்துக்கு உட்பட்ட மூன்றம்பட்டி கிராமத்திலுள்ள தளபதி நகரில் 10 ஆண்டுகளுக்கு முன்பு 300 இருளர் குடும்பங்கள் வந்து மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தில் குடிசை போட்டு தங்கியுள்ளனர். மேய்ச்சல் புறம்போக்கு நிலம் என்பதால் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மின்வாரியம் எந்தத் துறையில் இருந்தும், எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை. சாலை வசதியில்லாமல், இருட்டில் வாழ்ந்துவருகின்றனர் என அதிகாரிகள் மூலமாக அமைச்சர் காந்தியின் கவனத்துக்கு இந்த விவகாரம் சென்றதும் உடனடியாக அந்தக் கிராமத்துக்குச் சென்றார்.

 

The impact of the Jaybeam film; Chief Minister's order and ministers who turn around and resolve grievances!

 

அங்குள்ள இருளர் இன மக்களோடு உணவு அருந்தியவர், அவர்களின் கோரிக்கைகளை, குறைகளைக் கேட்டார். அப்போது, “எங்களுக்கு வீட்டுமனை பட்டா வேண்டும். அதில் வீடு கட்டித்தர வேண்டும். இங்கு ஆயிரம் பேர் வசிக்கிறோம், எங்கள் பிள்ளைகள் படிக்க பள்ளிக்கூடம் வேண்டும். குடிக்க தண்ணீர் இல்லாமல் நீண்ட தூரம் போய் எடுத்துவருகிறோம், தண்ணீர் வசதி செய்து தர வேண்டும்” என கோரிக்கை விடுத்தனர். இவற்றை எல்லாம் கேட்ட அமைச்சர், உடனடியாக செய்து தர நடவடிக்கை எடுக்கிறேன் என உத்திரவாதம் தந்தார். மேலும், அதிகாரிகளிடம் தகுதியான அனைத்து குடும்பத்தாருக்கும் உடனடியாக பட்டா வழங்க நடவடிக்கை எடுங்கள் என வருவாய்த்துறையினருக்கு உத்தரவிட்டார். அதேபோல், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளிடம், பட்டா வந்ததும் அவர்களுக்கு வீடு கட்டித்தருவதற்கான திட்டங்களைத் தீட்டுங்கள் என உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தெருவிளக்கும், குடிதண்ணீரும் கிடைக்க ஏற்பாடு செய்தவர், 15 நபர்களுக்கு முதியோர் உதவித் தொகைக்கான ஆணையும், 6 நபர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும் வழங்கினார்.

 

The impact of the Jaybeam film; Chief Minister's order and ministers who turn around and resolve grievances!

 

இராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் சந்தைமேடு பகுதியில் நரிக்குறவர்கள் 70 குடும்பத்தினர் கூரை வீட்டிலும், தார்பாய் மூலம் கட்டப்பட்ட வீடு போன்ற அமைப்பில் பல ஆண்டுகளாக வசித்துவந்தனர். இதுபற்றி தெரியவந்ததும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் உத்தரவுப்படி அதிகாரிகள் அவர்களுக்கு அதே பகுதியில் வீட்டுமனை வழங்க வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இலவச வீட்டுமனை பட்டாவை நவம்பர் 12ஆம் தேதி அமைச்சர் காந்தி நேரில் சென்று 67 குடும்பங்களுக்கு வழங்கினார். விரைவில் அரசின் இலவச வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் அவர்களுக்கு வீடுகள் கட்டித்தரப்படும் என வாக்குறுதி தந்தார்.

 

இதேபோல் சோளிங்கர் ஐப்பேடு கிராமத்தைச் சேர்ந்த 9 இருளர் குடும்பங்கள் மழையால் சமுதாய கூடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள், உடை போன்ற தேவைகளை செய்து தந்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரிப்பு; போலீசார் விசாரணை

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
In broad daylight, someone poured petrol and set it on fire; Police investigation

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டப்பகலில் சித்தப்பா மீது மகனே பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்து உள்ள சவரக்கோட்டை பிரிவு பகுதியில் வசித்து வருபவர் வடமலை. அவருடைய மகன்கள் சின்னவன் மற்றும் மணி. மணியின் மகன் செந்தில். கடந்த நான்கு நாட்களுக்கு முன்னதாக செந்தில் அவருடைய விவசாய நிலத்தில் அறுவடை பணிக்காக டிராக்டரில் சென்றுள்ளார். அப்பொழுது சித்தப்பா சின்னவன் மற்றும் செந்தில் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இது தொடர் பிரச்சனையாக இருந்து வந்த நிலையில் இருதரப்பினரும் காவேரிப்பட்டினம் போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சித்தப்பா சின்னவன் தீவனக்கடை ஒன்றில் இருந்த பொழுது கடைக்குச் சென்ற செந்தில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி பற்ற வைத்தார்.

இதில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த சின்னவனை அங்கிருந்தவர்கள் நேற்று தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பட்டப்பகலில் ஒருவர் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Next Story

காதலை கைவிட மறுத்ததால் ஆத்திரம்!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Rage for daughter refusing to give up love and incident happened in krishnagiri

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பட்வாரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கு காமாட்சி (33) என்ற மனைவியும், ஸ்பூர்த்தி எனும் 16 வயதில் மகளும் இருந்தார்கள். ஸ்பூர்த்தி, பாகலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 14ஆம் தேதி வீட்டை வெளியே சென்று ஸ்பூர்த்தி, இரவு நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. இதில், பதற்றமடைந்த ஸ்பூர்த்தியின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர், அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். ஆனால், அவர்கள் எங்கு தேடியும் ஸ்பூர்த்தி கிடைக்கவில்லை.

இந்த நிலையில், நேற்று முன் தினம் (16-03-24) இரவு பட்வாரப்பள்ளி பகுதியில் உள்ள ஏரியில் ஒரு இளம்பெண் பிணமாக கிடந்தார். இதனை கண்ட அங்கிருந்தவர்கள், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அந்த விசாரணையில், ஏரியில் பிணமாக கிடந்தது ஸ்பூர்த்தி என்பதும், அவர் கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. மேலும், அவர்கள் நடத்திய விசாரணையில், ஸ்பூர்த்தியும், பாகலூர் அருகே முத்தாலி பகுதியைச் சேர்ந்த சிவா (25) என்ற இளைஞரும் நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளனர். இந்த விவகாரத்தை அறிந்த ஸ்பூர்த்தியின் பெற்றோர், அவரது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், ஸ்பூர்த்தி தனது காதலை கைவிடவில்லை என்று கூறப்படுகிறது. 

இதில் ஆத்திரமடைந்த ஸ்பூர்த்தியின் தந்தை பிரகாஷ், தாய் காமாட்சி ஆகியோர், மாணவியை கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளனர். மேலும், மாணவியின் உடலை சாக்கு மூட்டையில் அடைத்து மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்று அந்த பகுதியில் ஏரியில் வீசியுள்ளதாக தெரியவந்தது. இதனையடுத்து, பிரகாஷ், காமாட்சி மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த ஸ்பூர்த்தியின் பெரியம்மா மீனாட்சி (36) ஆகிய 3 பேரையில் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காதலை கைவிடாததால், பெற்றோரே மகளை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.