
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா நடத்திய தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே தாக்குதல் சம்பவங்கள் நடந்தது. இதில், எல்லைகளை மீறி இந்தியாவின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வந்த தாக்குதல் முயற்சிகளையும், இந்தியா முறியடித்தது.
இரு நாடுகளுக்கும் போர் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், தாக்குதல்களை நிறுத்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அதனை தொடர்ந்து, கடந்த 10ஆம் தேதி மாலை 5 மணிக்கு இருநாட்டு ராணுவ தளபதி இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தாக்குதல் நிறுத்தத்தை ஒப்புக்கொண்டதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்த சூழ்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான தாக்குதல் நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தது ஏன்? என்பது தொடர்பான விவாதங்கள் நாட்டு மக்களிடம் இருந்து வருகிறது. இதற்கிடையில் ஆபரேஷன் சிந்தூர் குறித்தும், அமெரிக்க அதிபர் டிரம்ப் தாக்குதல் நிறுத்தத்தை அறிவித்தது குறித்தும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என மக்களவை எதிர்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்தார்.

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் தணிந்து வந்த நிலையில், நேற்று (12-05-25) இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்ற இருந்தார். ஆனால், அமெரிக்கா தான் இந்த தாக்குதலை நிறுத்தியது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இது குறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்தியா - பாகிஸ்தான இடையில் போர் நிறுத்தம் நிரந்தரமாகவே இருக்கும் என நம்புகிறேன். அமெரிக்காவால் இந்திய-பாகிஸ்தான் இடையேயான அணு ஆயுத மோதலை அமெரிக்கா நிறுத்தியது. போரை நிறுத்தாவிட்டால் வணிகம் செய்ய மாட்டேன் என நான் கூறியதை அடுத்து இரு நாடுகளும் ஏற்றுக் கொண்டன. வணிகத்தை என்னைப்போல் யாரும் பயன்படுத்தி இருக்க மாட்டார்கள். சண்டை நிறுத்தும் ஒன்றே நிரந்தர தீர்வு” என்று பேசினார். இது ஒட்டுமொத்த நாட்டையே பரபரப்பாக்கியுள்ளது.
அதன் பின்னர், பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அதில் அவர், அடி தாங்க முடியமால் பாகிஸ்தான் நம்மிடம் கெஞ்சியது, இந்தியாவின் பதிலடியை எதிர்கொள்ள முடியாமல் உலக நாடுகள் மத்தியில் பாகிஸ்தான் கதறி அழுதது என்று கூறினார். இந்தியாவும் பாகிஸ்தானும் இரு தரப்பினருடனும் வர்த்தக உறவுகளைத் துண்டிப்பதாக மிரட்டிய பின்னரே, இரு நாடுகளும் சண்டையிடுவதை நிறுத்த முடிவு செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியது குறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் மெளனம் காத்த பிரதமர் மோடியை காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.
இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா கூறுகையில், “அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறிய கருத்துக்கள் குறித்து பிரதமர் மோடி மெளனம் காத்தது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஒரு பெண்ணின் கண்ணியம் மற்றும் தியாகம் என்று வரும்போது சமரசத்திற்கு இடமில்லை. காஷ்மீர் பிரச்சினையை சர்வதேசமயமாக்க டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து பிரதமர் மோடி ஏன் அமைதியாக இருந்தார்?” என்று கேள்வி எழுப்பி இது குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தை விவாதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.