
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி (12.02.2019) 19 வயதான கல்லூரி மாணவி ஒருவர் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், “தனக்கு ஏற்கனவே பழக்கமான சபரிராஜன் என்பவருடன் காரில் சென்ற போது சபரிராஜனுடன் இருந்த திருநாவுக்கரசு, சதீஷ் மற்றும் வசந்தகுமார் ஆகிய 4 பேரும் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு வீடியோ எடுத்து மிரட்டல் விடுத்தனர்” எனத் தெரிவித்திருந்தார். தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று, ‘பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம்’ ஆகும்.
இளம் பெண்கள், மாணவிகள் எனப் பலரையும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வீடியோ எடுத்து மிரட்டப்பட்ட இந்த சம்பவத்தினை ‘நக்கீரன்’ இதழ் அம்பலப்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை, கூட்டுச்சதி உள்ளிட்ட 8 பிரிவுகளின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், மணிவண்ணன், ஹேரன் பால், பாபு, அருளானந்தம், அருண்குமார் மற்றும் வசந்தகுமார் என மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் அரசு சார்பில் 50 சாட்சிகள்; 200 ஆவணங்கள்; 40க்கும் மேற்பட்ட மின்னணு தரவுகள் முக்கிய சாட்சியாக இடம் பெற்றன. இந்த வழக்கின் விசாரணையானது கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகிளா (மகளிர்) கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
மேலும் இந்த வழக்கில் சுமார் 1,500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி இந்த வழக்கில் அரசு மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பு என இருதரப்பு வாதங்களும், அரசு சார்பில் பதில் வாதமும் கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி (28.04.2025) முடிவடைந்தது. இதனையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு மே 13ஆம் தேதி வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் நீதிபதி நந்தினி தேவி இன்று (13.05.2025) தீர்ப்பு வழங்கினார். அதில், “இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு வழங்கப்படுகிறது. தண்டனை விவரம் 12 மணிக்கு வழங்கப்படும்” என்ற அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளார்.
முன்னதாக சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இதன் காரணமாக நீதிமன்ற வளாகத்தில் 80க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டன. அதோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நீதிமன்ற வளாகத்தின் முன் பேரி கார்டுகள் அமைக்கப்பட்டுப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.