கோவை மாவட்டம் காரமடையை அடுத்துள்ள கே.புங்கம்பாளையத்தைச் சேர்ந்தவர் பாக்கியலட்சுமி என்ற பாக்கியசெல்வி (வயது 70). கணவரைப் பிரிந்து வாழ்ந்துவருகிறார். இவர் வீட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் புரோக்கராக வேலை பார்த்துவருகிறார். இவர், குடும்ப சூழ்நிலை காரணமாக வேலை கேட்டுவரும் இளம்பெண்கள் மற்றும் குடும்பப் பெண்களிடம் ‘உனக்கு வேலை தர்றேன், அதுக்குத் தகுந்த பணமும் தர்றேன்’ என பணத்தாசை காட்டி, தனது வலையில் சிக்கவைத்து, பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசித்துவரும் இளம்பெண்கள் மற்றும் குடும்பப் பெண்களை இதே மாதிரி பயன்படுத்தி, இத்தொழிலில் ஈடுபடுத்திவந்துள்ளார். இதற்காக தனது வீட்டினை விபச்சாரத்திற்கு ஏற்ற வகையில் அறைகளைத் தயார் செய்தும் வைத்திருக்கிறார். இந்நிலையில், நேற்றைய தினம் காரமடை அருகே உள்ள தொட்டிபாளையத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், குடும்பப் பிரச்சினை காரணமாக சில நாட்களாக மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவந்துள்ளார். அவரிடம் பாலியல் தொழில் செய்யும் புரோக்கரான பாக்கியலட்சுமி, தன்னிடம் இளம்பெண்கள் உள்ளதாகவும், பணம் கொடுத்தால் உல்லாசமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார். அதற்கு முன்பணமாக ஆயிரம் ரூபாய் கொடு என கேட்டுள்ளார்.
இதனையடுத்து அந்த இளைஞர், தன்னிடம் பணம் இல்லை, அருகில் உள்ள ஏடி.எம்.மில் இருந்து பணம் எடுத்துவருவதாக கூறி அவ்விடத்தைவிட்டு நகர்ந்து சென்றுவிட்டார். அவர் காரமடை காவல் நிலையத்திற்குத் தகவல் அளிக்க, காரமடை காவல்துறையினர் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்து விபச்சாரக் கும்பலை மடக்கிப் பிடித்தனர். அப்போது அந்த வீட்டில் இளம்பெண்கள் இருந்ததைத் தொடர்ந்து, இதனை நடத்திவந்த 70 வயதான பாக்கியலட்சுமி என்ற மூதாட்டியைக் கைதுசெய்ய சென்றனர். அப்போது, தன்னைப் பிடித்தால் மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திக்கொள்வேன் என மிரட்டியுள்ளார். பின்னர் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அந்த மூதாட்டியிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி காரமடை காவல் நிலையம் அழைத்து வந்து அவர் மீது வழக்குப் பதிவுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையிலடைத்தனர்.
மேலும், அவ்வீட்டில் இருந்த 5 இளம்பெண்களை மீட்டு கோவையில் உள்ள ஒரு காப்பகத்திற்கு அனுப்பிவைத்தனர். இந்த தகவலறிந்த செய்தியாளர்கள், காரமடை காவல் நிலையத்திற்கு வந்து பெண் புரோக்கரை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும்போது புகைப்படம் எடுத்தனர். அப்போது புரோக்கர் பாக்கியலட்சுமி அருவருக்கத்தக்க வகையில் “என்னையா ஃபோட்டோ எடுக்கிறீங்க? நான் யார் தெரியுமா?” என ஆரம்பித்து தகாத வார்த்தையால் திட்டித் தீர்த்தார். இந்த வயதில் பிறரின் ஏழ்மையைப் பயன்படுத்திப் பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்துவிட்டு, எந்தக் குற்றவுணர்ச்சியும் இல்லாமல் ஹாயாக காரில் ஏறிச் சென்றார் அந்த 70 வயது மூதாட்டி.