தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்திற்கு செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்திய தே.மு.தி.க. பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டவர்களை தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு நலச்சங்கம் வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு நலச்சங்க மாநிலச்செயலாளர் மிதார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி 56வது நாளாக தொடர் போராட்டம் நடத்தி வரும் அ.குமரெட்டியாபுரம் மக்களைச் சந்தித்து ஆதரவு தெரிவிக்க வந்திருந்தார் பிரேமலதா விஜயகாந்த். இன்று நடந்த நிகழ்ச்சியில் அரசியல்வாதிக்கே உரித்தான தொணியில் அங்கு கூடியிருந்த மக்களின் நன்மதிப்பைப் பெறவேண்டும் என்ற எண்ணத்தில் பத்திரிகையாளர்கள் மீது அவதூறு பரப்பும் வகையில் தரந்தாழ்ந்து பேசியுள்ளார்.
அவரது பேச்சில் தனது செய்தி நிறுவனம் மட்டும் தொடர்ந்து ஸ்டெர்லைட் பிரச்சினையை ஒளிபரப்பி வருவதாகவும் மற்றவை ஒளிபரப்பவில்லை. அச்சு ஊடகங்கள் வெளிக்கொணரவில்லை என்றும் கூறியுள்ளார். அப்படியாயின் அது பத்திரிகையாளரின் தவறில்லை. அந்த நிறுவனங்களின் தவறு பத்திரிகையாளரைக் குறிப்பதாகக் கொண்டால் தூத்துக்குடியில் உள்ள அவரது செய்தி நிறுவன செய்தியாளர் மட்டும் சமூக அக்கறை கொண்டவர்; பிற பகுதிகளில் நடைபெறும் மக்கள் போராட்டங்களை வெளிக்கொணராத பிற பகுதி செய்தியாளர்கள் சமூக அக்கறை இல்லாதவர்கள் என்றுதானே அர்த்தம்.
இந்தத் தாக்குதல் காட்டுமிராண்டித் தனமானது. மிகவும் கண்டனத்திற்குரியது. இதுபோன்று செய்தியாளர்களை அரசியல்வாதிகளும், பொதுமக்களும் அவதூறாகப் பேசுவதென்பது இன்றைய காலகட்டத்தில் தொடர்கதையாகி வருவது வேதனைக்குரியதாக உள்ளது.
உண்மை நிலையை அலசிப் பார்த்தால் இன்று தமிழகத்தில் உருவாகியுள்ள பல பிரச்சினைகள், காவிரி, நியூட்ரினோ, ஸ்டெர்லைட், கூடங்குளம், இனயம் உள்ளிட்ட பிரச்சினைகள் அரசியல்வாதிகளால் உருவானதுதானே.
நீங்கள் உண்மை அரசியல் நடத்துபவராக இருந்தால், அந்த அரசியல் கட்சிகளை நேரடியாக எதிர்க்க வேண்டியதுதானே. ஏன் காலத்திற்குத் தகுந்தாற்போல் கூட்டணி வைக்கிறீர்கள். ஒவ்வொரு அரசியல் கட்சியும் அவர்கள் ஆதாயத்திற்காக ஒரு செய்தி நிறுவனத்தை நடத்திக்கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கி அரசியல்தானே நடத்துகிறீர்கள். அப்படி என்றால் அதில் பணிபுரியும் செய்தியாளர் எப்படி நடுநிலையோடு செயல்படமுடியும்.
நீங்கள் இன்று இந்தப் போராட்டக்களத்திற்கு சுமார் 55 நாள்களுக்குப் பின் ஏன் வந்தீர்கள். உங்கள் செய்தி நிறுவனத்தில் தொடர்ந்து செய்தி வெளியிட்டும் உங்களுக்கு உரைக்கவில்லையா? அல்லது இதைவிடவும் முதன்மையானப் போராட்டத்தில் 54 நாட்களாகக் கலந்துகொண்டீர்களா? இல்லை உங்களுக்கு உரைக்கும் வகையில் உங்கள் செய்தியாளர் செய்தி பதிவிடவில்லையா?
இந்தப் போராட்டம் தேமுதிக தொண்டர்கள் தனித்தோ திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சித் தொண்டர்கள் தனித்தனியாகவோ போராடவில்லை. அனைவரும் இணைந்து ஒரே குடும்பமாக சகோதரர்களாக உறவினர்களாக ஒருவருக்கொருவர் கை கோர்த்து ஒற்றுமையாகப் போராடி வருகின்றனர். அவர்களோடு இணைந்து இரவு பகல் பாராமல் அவர்கள் அருந்தும் நீர், அவர்கள் உண்ணும் உணவு இவற்றை உட்கொண்டே அனைத்துப் பத்திரிக்கை சகோதரர்களும் போராடும் மக்களின் உறவாக இணைந்து தோள் கொடுத்து வருகின்றனர்.
மக்களுக்த் தெரியும் யார் உண்மையாக போராட்டத்திற்கு ஆதரவு தருகிறார்கள் யார் தரவில்லை என்று. அவர்கள் மத்தியில் பத்திரிகையாளர்கள் குறித்தப் பேச்சு உங்கள் மதிப்பைக் குறைப்பதாக தான் இருக்கும், முதலில் அரசியல்வாதிகள் திருந்துங்கள். தவறு செய்யும் அரசியல் கட்சிகளை, அரசியல்வாதிகளை எதிர்த்து நேருக்கு நேர் குரல் கொடுங்கள். நீங்களும் செய்தி நிறுவனம் நடத்துகிறீர்கள். அதன் உரிமையாளர் என்ற இடத்திலிருந்து இறங்கி ஒரு செய்தியாளராக, பிற செய்தியாளர்களின் நன்மை தீமைகளை உணர்ந்து அவர்களின் உழைப்பை உணர்ந்து அவர்களை மதிக்கப் பழகுங்கள்.
இவ்வளவும் பேசும் நீங்கள் உங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் செய்தியாளர்களுக்கு, ஊழியர்களுக்கு சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு ஊதியம் உள்ளிட்ட பலன்களை வழங்குகிறீர்களா? முதலில் அதை சரிசெய்யுங்கள். பிறகு அவர்களைப் பற்றி குறை கூறுங்கள்.
வெட்ட வெளியில் நின்று உங்கள் தலையில் நீங்களே புழுதிவாரிப் போட்டுக் கொள்ளாதீர்கள். ஊடகங்கள் மீது அவதூறாக பேசியதால்தான் பத்திரிகையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்து சென்றுவிட்டனர். ஆங்காங்கே தனியாக நின்று கொண்டிருந்த பத்திரிகையாளர்களைப் பார்த்து பிரேமலதா சகோதரர் சுதீஷ் தலைமையில்
தே.மு.தி.க குண்டர்கள் தகாத வார்த்தைகளில் பேசி உள்ளனர். அப்போது பத்திரிகையாளர்களுக்கும் தே.மு.தி.க குண்டர்களுக்கும் வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டு அதுவே கைகலப்பாக மாறி பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.
இதில் 3 நிருபர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ஊடகங்கள் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழித்தோன்றலாக அவரது மனைவி பிரேமலதா, பிரேமலதாவின் சகோதரர் சுதீஷ் போன்றவர்களின் இந்த நிகழ்வுகள் குறித்து தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மகேந்திரன் அவர்களிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்திய தேமுதிகவினர் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு நலச் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.