Skip to main content

நீதிபதியின் திடீர் ஆய்வு - அமைச்சர் அதிர்ச்சி!

Published on 07/09/2018 | Edited on 07/09/2018
j

 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தமிழகத்தில் மிகவும் முக்கியமான கோயில். தென்னிந்தியாவில் பிரபலமான இந்த கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், பௌர்ணமியன்று 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர்.


இந்த கோயில் வளாகத்துக்கு செப்டம்பர் 6ந்தேதி  வருகை தந்த மாவட்ட நீதிபதி மகிழேந்தி, மாவட்ட சட்டப்பணிகள் குழுவின் செயலாளர் ராஜ்மோகன் இருவரும் ஆய்வு செய்தனர். கோயில் வளாகத்தில் அன்னதானக்கூடம் உள்ளது. இங்கு கோயில் சார்பில் தினமும் மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது. அந்த அன்னதானம் கூடத்தை நீதிபதி போய் பார்த்தபோது சுகாதாரமற்ற முறையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சியாகினர். அதோடு, கோயில் அலுவலகத்தில் ஊழியர்கள் அடையாள அட்டை, சீருடை யில்லாமல் பணியாற்றுவதை பார்த்து அவர்களிடம் கேள்வி எழுப்ப அவர்கள் பதில் சொல்லாமல் மழுப்பினர்.

 

j


கோயில் வளாகத்தில் கோசாலை உள்ளது. இங்கு ஆய்வுக்காக உள்ளே சென்றவர்களின் கண்களில் காலி பீர்பாட்டில் பட்டது. கோயிலுக்குள் பீர்பாட்டில் எப்படி வந்தது எனக்கேட்க அங்கிருந்த ஊழியர்கள் முழித்தனர். தரிசனத்துக்காக வரிசையில் நின்றிருந்த பொதுமக்களிடம் குறைக்கேட்ட நீதிபதியிடம், அன்னதானம் சரியாக இல்லை என குறை சொன்னார்கள், அதோடு. புரோக்கர்கள் நிறையப்பேர் கோயிலுக்குள் உலாவுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டையும் வைத்தார்கள். அதோடு, கோயிலில் புதியதாக செய்யப்பட்ட தங்கத்தேர் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஓடாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது, இதனால் வேண்டுதல் நிறைவேற்ற முடியாமல் பல பக்தர்கள் தவிக்கின்றனர் என்றார்கள்.


இதுப்பற்றியெல்லாம் கோயில் இணை ஆணையர் அலுவலகத்துக்கு வந்து அங்கிருந்த இணை ஆணையர் ஞானசேகரனிடம் கேள்வி எழுப்ப அவர் பதில் சொல்ல முடியாமல் தினறினார். ஆய்வுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நீதிபதி மகிழேந்தி, பெண்கள், வயதானவர்களுக்கு என எந்த அடிப்படை வசதியும் கோயிலுக்குள் கிடையாது, வெயிலில் பக்தர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். கோயில் வளாகம் சுத்தமாகயில்லை, அசுத்தமாகவே உள்ளன, இதையெல்லாம் கவனிக்காமல் என்ன செய்கிறார்கள் என்றே தெரியவில்லை. குறைகளை விரைவில் சரி செய்துவிடுகிறோம் எனச்சொல்லியுள்ளார்கள் பார்க்கலாம், கோயிலில் புரோக்கர்களாக உலாவும் 15 பேர் கொண்ட பட்டியலை காவல்துறைக்கு அனுப்பியுள்ளது, விரைவில் நடவடிக்கை எடுப்பார்கள் என்றார்.

 

அமைச்சர் 

ministers


அண்ணாமலையார் கோயிலுக்குள் பல சிவாச்சாரியர்கள், புரோக்கர்கள், அதிகாரிகள் இணைந்து கூட்டணி வைத்துக்கொண்டு கொள்ளையடிக்கிறார்கள். அரசுக்கு வரவேண்டிய வருவாய் தனிநபர்களுக்கு செல்கிறது, பக்தர்கள் தரும் நன்கொடைகள் கொள்ளையடிக்கப்படுகின்றன என்கிற குற்றச்சாட்டு நீண்ட வருடங்களாக உண்டு. இதை கடந்த காலத்தில் அறநிலையத்துறை அமைச்சராக வந்தவர்கள் தான் சரிசெய்யவில்லை என்றால் தற்போது அறநிலையத்துறை அமைச்சராகவுள்ள சேவூர்.இராமச்சந்திரனின் சொந்த மாவட்டம் தான் திருவண்ணாமலை. இந்த குறைபாடுகள் அனைத்தும் அமைச்சருக்கும் தெரியும். ஆனால் அவர் அதை கண்டுக்கொள்ளவில்லை. 


அறநிலையத்துறை அமைச்சரின் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்றகோயிலில் நிர்வாகம சரியாக செயல்படவில்லை, தூய்மையில்லை, ஆவணங்கள் சரியாகயில்லை என்பதை நீதிபதி ஆய்வே வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. கோயிலில் நீதிபதியின் ஆய்வு அமைச்சரை அதிர்ச்சியாக்கியுள்ளது என்கிறார்கள் அதிமுகவினர். 
 

சார்ந்த செய்திகள்