Skip to main content

குடகனாற்று தண்ணீர் உரிமைக்காக போராடும் மக்களுக்கு  உறுதுணையாக இருப்பேன்- திமுக மாநில துணைப்பொதுச் செயலாளர் இ.பெரியசாமி

Published on 21/12/2019 | Edited on 21/12/2019


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை பெய்தால் ஒரு பகுதி பழனியில் உள்ள மஞ்சளாற்றுக்கும், புல்லாவெளி மற்றும் பெரும்பாறை மஞ்சள்பரப்பு பகுதியில் பெய்யும் மழைத் தண்ணீர் இயற்கையாகவே ஆத்தூரில் உள்ள காமராஜர் நீர்த்தேக்கத்திற்கு வருவது போல் நீர்வரத்து வாய்க்கால் (ஓடை) உள்ளது. 

கடந்த நூறு ஆண்டுகளாக மழை பெய்யும் போது மழைநீர் மேற்குத்தொடர்ச்சி அடிவார கிராமங்களான ஆத்தூர், மல்லையாபுரம், அக்கரைப்பட்டி, நரசிங்கபுரம், சித்தையன்கோட்டை பகுதி மற்றும் சீவல்சரகு, வீரக்கல், அனுமந்தராயன்கோட்டை, அணைப்பட்டி, பொன்னிமாந்துரை ஊராட்சிகளில் உள்ள குளங்களுக்கும், குட்டைகளுக்கும் நீர்வரத்து வருவதுபோல் வாய்க்கால்கள் உள்ளது. 

 

 I will be committed to the people who fight for the right to water - DMK State Secretary

 

திண்டுக்கல் மற்றும் சின்னாளபட்டி, சித்தையன்கோட்டை மற்றும் வழியோர கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் ஆதாரத்திற்காக காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது காமராஜர் நீர்த்தேக்கம் கட்டப்பட்டது. மழைபெய்தால் 23 அடி கொள்ளளவுள்ள காமராஜர் நீர்த்தேக்கம் நிறைந்து தண்ணீர் மருகால் பாய்ந்து குடகனாறு வழியாக மேற்கண்ட கிராமங்களுக்கு சென்று வந்தது. இதுபோல மேற்குத் தொடர்ச்சியிலிருந்து மழைதண்ணீர் வரும்போது கன்னிமார் கோவில் அருகே உள்ள பாறாங்கற்களான தடுப்பில் இயற்கையாகவே தடுக்கப்பட்டு மழைநீர் தடுப்பின் உள்ள இடுக்கின் வழியாகவும், அதற்கு மேலாகவும் வெளியேறும் தண்ணீர் கூழையாற்று தண்ணீருடன் கலந்து ஆத்தூரில் ஒன்றியத்தில் உள்ள பகடைக்குளம், புல்வெட்டிக்குளம் மற்றும் குடகனாற்றின் வழியே தாமரைக்குளம், அணைப்பட்டி குளம் நிறைந்து ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் உள்ள தாமரைக்குளம், மாட்டுக்காரன்குளம், அவதாருகுளம், ஆலாங்குளம், குட்டைக்குளம், பொன்னிமாந்துறையில் உள்ள குளங்கள் நிரம்பி தண்ணீர் குடகனாற்று வழியாக வேடசந்தூரை சென்றடைந்து வந்தது. 

கடந்த 2014ம் வருடம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆத்தூர் ஒன்றியத்தில் சிமிண்ட் வாய்க்கால் கட்டும்போது வாய்க்காலின் உயரத்தை அதிக அளவில் வைத்து கட்டி விட்டதால் தண்ணீர் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் உள்ள குளங்களுக்கு வராதநிலை ஏற்பட்டுவிட்டது. இதுகுறித்து தி.மு.க. மாநில துணைப் பொதுச் செயலாளரும், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. உறுப்பினருமான இ.பெரியசாமி அவர்கள் பலமுறை அப்போதைய மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் அவர்களிடம் கூறியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதுதவிர மழைக்காலங்களில் சிமிண்ட் வாய்க்காலில் மணல் மூட்டை அடுக்கி தெற்கு பகுதிக்கு செல்லும் தண்ணீரை தடுத்து ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் உள்ள குளங்கள் நிரம்புவதற்காகவும், ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம் நிரம்புவதற்காகவும் தண்ணீரை திருப்பிவிட்டால் ஆத்தூர் ஒன்றிய விவசாயிகள் இரவு நேரங்களில் மணல்மூட்டையை எடுத்து சென்றுவிடுவதால் தண்ணீர் இப்பகுதிக்கு (ரெட்டியார்சத்திரம்) வராமல் போய்விட்டது.

 

 I will be committed to the people who fight for the right to water - DMK State Secretary


இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் பலமுறை போராட்டம் நடத்தியும் சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற தேர்தலின் போது வீடுகளில் கருப்புக் கொடி கட்டியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்துவந்தனர். பலமுறை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துக்கூறியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. கடந்த நவம்பர் மாதம் 28ம் தேதி தி.மு.க. மாநில துணைப் பொதுச் செயலாளர் இ.பெரியசாமி தலைமையில் சித்தையன்கோட்டை பாசன விவசாயிகள் சங்கம், பொன்னிமாந்துறை, அனுமந்தராயன்கோட்டை, மைலாப்பூர், ஆவாரம்பட்டி, அணைப்பட்டி ஆகிய கிராமங்கள் அடங்கிய தாமரைக்குளம் விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமியிடம் இதுகுறித்து புகார் மனுவை அளித்தனர்.

அந்த புகார் மனுவில் கன்னிமார் கோவில் அருகே கட்டப்பட்டுள்ள தடுப்பணையை முறையாக ஆய்வு செய்து ரெட்டியார்சத்திரம் ஒன்றிய குளங்களுக்கு தண்ணீர் வருமாறு ஏற்பாடு செய்யும்படி வேண்டுகொள் விடுத்தனர். ஒருமாத காலம் ஆகியும் எவ்வித நடவடிக்கையும் இல்லாததால் நேற்று முன்தினம் 18ம் தேதி இரவு அனுமந்தராயன்கோட்டையில் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள், இளைஞர்கள் நூற்றுக் கணக்கானோர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் பொதுமக்கள் தர்ணாவை கைவிட்டு கலைந்து செல்லவில்லை.

போராட்டம் 18ம் தேதி தொடங்கி 20ம் தேதி இன்று வரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நூற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் ஆண்கள், இளைஞர்கள் பந்தலில் அமர்ந்தவாறு தங்களது நியாயமான கோரிக்கைகளை கூறி கோஷமிட்டவாறு இருந்து வந்தனர். நேற்று (20.12.19) காலை 11 மணியளவில் அனுமந்தராயன்கோட்டைக்கு வந்த தி.மு.க. மாநில துணைப் பொதுச் செயலாளர் போராடும் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, நியாயத்திற்காக போராடும் உங்களுக்கு என்றும் உறுதுணையாக இருப்பேன் என்றார். அப்போது சில இளைஞர்கள் தங்களை காவல்துறை அதிகாரிகள் மிரட்டுவதாகவும், குண்டாஸ் மற்றும் இதர சட்டப்பிரிவில் வழக்குப் பதிவு செய்வோம் எனக் கூறுகிறார்கள். அவர்கள் மத்தியில் பேசிய இ.பெரியசாமி போராடும் விவசாயிகளுக்காக என்றும் உறுதுணையாக இருப்பேன் என்று கூறினார்.

அப்போது சில இளைஞர்கள் எங்களை காவல்துறை அதிகாரிகள் மிரட்டுகிறார்கள். கைதுசெய்வோம் என கூறுகிறார்கள் என்று சொன்னபோது அவர்கள் மத்தியில் பேசிய பெரியசாமி, உங்களை காவல்துறை அதிகாரிகள் யாராவது மிரட்டினாலோ, அல்லது கைது செய்ய முன்வந்தாலோ உங்களுக்கு முன் நான் சிறை செல்ல தயார் உங்கள் போராட்டம் வெற்றி பெறும் எனக்கூறி போராட்ட குழுவினரை வாழ்த்தினார். முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமியுடன் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் கு.சத்தியமூர்த்தி, பொன்னிமாந்துறை விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த அறிவழகன், அனுமந்தராயன்கோட்டை முன்னாள் தலைவர் எம்.இன்பராஜ் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்!

 

 

 

சார்ந்த செய்திகள்