திமுக எம்.பி கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக எம்.பி கதிர் ஆனந்த்க்கு தொடர்புடைய இடங்களில் பணம் வைக்கப்பட்டிருந்ததாக வெளியான விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதில் 11 கோடி ரூபாயை தேர்தல் பறக்கும் படையும் வருமான வரித்துறையும் பறிமுதல் செய்திருந்தனர். தேர்தல் செலவுக்காக பணம் வைக்கப்பட்டிருந்ததாக கதிர் ஆனந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிற நிலையில் அமலாக்கத்துறையும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றது. சட்டவிரோத பணப் பரிமாற்றம் இதில் நிகழ்ந்திருப்பதாகக் கூறி வழக்குப்பதிவு செய்து ஏற்கனவே சோதனை மேற்கொண்டு வந்தனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் காந்திநகர் பகுதியில் இருக்கக்கூடிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (03/01/2024) காலை முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவருடைய ஆதரவாளரும், நண்பருமான பூஞ்சோலை சீனிவாசன் என்பவரின் வீட்டிலும், தொழிற்சாலையிலும் சோதனை நடைபெற்று வருகிறது. மூன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் இருந்து ஐந்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பிற்காக சிஆர்பிஎப் வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வீட்டில் நடைபெற்று வரும் சோதனை குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்பொழுது அவர் பேசுகையில் ''எந்த டிபார்ட்மெண்ட் சோதனை செய்கிறது என்று கூட தெரியாது. கதிர் ஆனந்த் வீட்டில் யாரும் இல்லை. இரண்டு பணியாளர்கள் மட்டுமே உள்ளனர்'' என தெரிவித்தார்.