Skip to main content

சவர்மா சாப்பிட்ட சிறுமி பரிதாப பலி; உணவக உரிமையாளர் உள்பட 3 பேர் கைது!

Published on 19/09/2023 | Edited on 19/09/2023

 

hotel owner arrested as many people who ate food in became ill

 

நாமக்கல்லில், துரித உணவகத்தில் கெட்டுப்போன ஷவர்மா இறைச்சியை சாப்பிட்ட 14 வயது சிறுமி உடல்நலம் பாதிக்கப்பட்டு பரிதாபமாக  உயிரிழந்தார். இதையடுத்து, சம்பந்தப்பட்ட உணவக உரிமையாளர் உள்ளிட்ட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 

 

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவி ஒருவருக்கு, செப். 16ம் தேதி பிறந்த நாள்  வந்துள்ளது. இதையொட்டி அந்த மாணவி, தன்னுடன் படித்து வரும் 5 மாணவிகள், 7 மாணவர்களுக்கு, நாமக்கல்  பரமத்தி வேலூர் சாலையில்  உள்ள தனியார் துரித உணவகத்தில் விருந்து கொடுத்துள்ளார். அவர்கள் அனைவரும் சிக்கன் ஷவர்மா, சிக்கன் பிரைடு ரைஸ், கிரில்  சிக்கன் உள்ளிட்ட உணவு வகைகளை சாப்பிட்டுள்ளனர். 

 

மறுநாள் காலை, ஷவர்மா சாப்பிட்ட மாணவ, மாணவிகளில் 11 பேர் திடீரென்று வாந்தி எடுத்தனர். சிலர் மயங்கி விழுந்தனர். இதனால்  அவர்கள் தங்கியிருந்த விடுதியே களேபரமாக மாறியது. உடனடியாக சக மாணவ, மாணவிகள் அவர்களை மீட்டு, நாமக்கல் அரசு  மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் உமா, உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்கள் அந்த தனியார் துரித உணவகத்தில் ஆய்வு செய்தனர். அங்கு சிக்கன் உணவுகள் கெட்டுப் போயிருந்ததும், குளிர்சாதனப் பெட்டியில் கெட்டுப்போன இறைச்சி வகைகளை நீண்ட நாள்களாக இருப்பு  வைத்து இருந்ததும் தெரிய வந்தது. அந்த கடையில் இருந்து மொத்தம் 42 கிலோ இறைச்சி மற்றும் உணவுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து,  அழித்தனர். உணவின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.  

 

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இதே உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட ஒரு குடும்பமே உடல்நலம் பாதிக்கப்பட்டதாகவும் தகவல்  வெளியானது.     நாமக்கல் ஏ.எஸ்.பேட்டையைச் சேர்ந்தவர் தவக்குமார். இவருடைய மனைவி சுஜாதா (38). இவர்களுடைய மகள் கலையரசி (14), மகன் பூபதி  (12), சுஜாதாவின் அண்ணன் சுனோஜ், அண்ணி கவிதா ஆகியோர் செப். 16ம் தேதி இரவு, அந்த தனியார் உணவகத்தில் சிக்கன் ஷவர்மாவை வீட்டுக்கு  பார்சல் வாங்கிச்சென்று சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவர்களுக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் உடனடியாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, வீடு திரும்பினர்.     

 

இந்நிலையில், செப். 18ம் தேதி (திங்கள் கிழமை) அதிகாலை 5 மணியளவில் சிறுமி கலையரசி படுக்கையில் இறந்து கிடந்தார். இதைப்பார்த்து  அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், காவல்துறைக்கு தகவல் அளித்தனர். நிகழ்விடம் விரைந்த காவல்துறையினர், சடலத்தை மீட்டு, உடற்கூராய்வுக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  முதல் நாள் இரவு சாப்பிட்ட சிக்கன் ஷவர்மா விஷமாக மாறியிருக்கலாம் என்ற சந்தேகத்தால் சிறுமியின் தாயார், தம்பி, அத்தை, மாமா ஆகியோரையும் தொடர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  அதேபோல், அந்த தனியார் உணவகத்தில் சிக்கன் ஷவர்மா, சிக்கன் உணவுகள் சாப்பிட்ட நாமக்கல் கொண்டிசெட்டிப்பட்டியைச் சேர்ந்த அஜய் (29), தமிழ்செல்வன் (25), நாமக்கல் ஆண்டவர் நகரைச் சேர்ந்த திலகவதி (39), சிந்துஜா (36), அஜித் தர்ஷன்(14) ஆகியோருக்கும் திடீரென்று உடல்  உபாதை ஏற்பட்டுள்ளது.  இவர்கள் உள்பட அந்த தனியார் உணவகத்தில் குறிப்பிட்ட நாளில் சாப்பிட்டவர்களில் 43 பேர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். சிகிச்சை பெற்று வருபவர்களை, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா, எம்எல்ஏ ராமலிங்கம், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, நகர்மன்றத் தலைவர் கலாநிதி ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.     

 

இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா ஊடகங்களிடம் கூறியது: “அந்த  துரித உணவகத்தில், நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவிகள் சம்பவத்தன்று இரவு ஷவர்மா, சிக்கன் பிரைடு ரைஸ்,  நான், தந்தூரி சிக்கன் உள்ளிட்ட உணவு வகைகளை சாப்பிட்டுள்ளனர். மறுநாள் காலையில் அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது  உடல்நலனில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதே உணவகத்தில் சிக்கன் உணவுகளை சாப்பிட்ட 14 வயது பள்ளிக் குழந்தை இன்று (செப். 18) காலை இறந்து விட்டார். அந்த குழந்தையும்,  பெற்றோரும் அந்த உணவகத்தில் இருந்து பார்சல் வாங்கிச்சென்று சாப்பிட்டுள்ளனர். அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தனியார் உணவகத்தில் சாப்பிட்டவர்களில் ஒரே நாளில் 43 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு, உள்நோயாளிகளாக சேர்க்கப்பட்டு  உள்ளனர். இவர்களில் அரசு மருத்துவமனையில் 3 குழந்தைகள் உள்பட 24 பேரும், தனியார் மருத்துவமனையில் 19 பேரும் சேர்க்கப்பட்டு  உள்ளனர். இவர்களில் ஒருவர் கர்ப்பிணி. அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்றார் ஆட்சியர் உமா.   

 

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட காவல்துறை எஸ்.பி., ராஜேஷ்கண்ணன் கூறுகையில், “ உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்டு இறந்து போன சிறுமியின் உறவினர்கள் அளித்த புகாரின்பேரில், உணவக உரிமையாளரான நாமக்கல் சிலுவம்பட்டியைச் சேர்ந்த நவீன்குமார்(26), சமையலர்கள் சஞ்சய் மகாகுர்(27), தபாஷ்குமார் (30) ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் மூவர் மீதும் பிணையில் வெளியே வர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம்  நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது” என்றார். இதற்கிடையே, நாமக்கல் மாவட்டம் முழுவதும் உணவகங்களில் ஷவர்மா, கிரில் சிக்கன், பிரைடு ரைஸ் உள்ளிட்ட உணவு வகைகளை விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்