Skip to main content

பல்கலைக்கழகங்களுக்கு உயர்கல்வித்துறை முக்கிய அறிவுறுத்தல்!

Published on 29/12/2024 | Edited on 29/12/2024
Higher Education Key Instruction for Universities

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரன் என்பவரைக் கடந்த 25ஆம் தேதி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கைத் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக வளாகங்களில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து உயர் கல்வித்துறை செயலாளர் கோபால் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அப்போது உயர் கல்வித்துறை செயலாளர், “கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி வளாகங்களில் வெளிநபர்களை அனுமதிக்கக் கூடாது. கல்வி நிலையங்களுக்குள் மாணவர்கள் கட்டாயம் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும். பாதுகாப்பு நடவடிக்கைகளில் அனைத்து பல்கலைக்கழகங்களும் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.

கல்வி நிலையங்களுக்குள் வந்து செல்லும் நபர்கள் குறித்த பதிவு கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும். கல்வி நிறுவனங்களுக்குச் சம்பந்தமில்லாத நபர்களை உள்ளே அனுமதிக்கக் கூடாது.  வெளி ஆட்கள் நடமாட்டம் இருந்தால் உடனே புகார் அளிக்க வேண்டும். தனியார் செக்யூரிட்டி நிறுவனங்களைப் பாதுகாப்பிற்குப் பயன்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறையை அனைத்து உயர்கல்வி நிலையங்களிலும் கடைப்பிடிக்க வேண்டும். கட்டுப்பாடுகளைப் பின்பற்றும் அதே வேளையில் மாணவர்களை நெருக்கடிக்கு உள்ளாக்குதல் கூடாது. பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் குழு, போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்திடும் குழு ஆகியவை அமைக்கப்பட்டு உரியக் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளுதல் வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

சார்ந்த செய்திகள்