கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டச் செயலாளரும் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தன் கார்த்திகேயன், இவர் ரிஷிவந்தியம் தொகுதியில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். இந்தத் தொகுதியில் வாணாபுரம் பகுதியில் இருக்கும் மக்கள் 40 கி.மீ தொலைவில் உள்ள சங்கராபுரம் தாலுகா அலுவலகத்திற்கு சென்று வர இருந்தது. இதன் காரணமாக தற்போது வாணாபுரத்தில் புதிய தாலுகா அலுவலகம் எம்.எல்.ஏ. வசந்தன் கார்த்திகேயன் முயற்சியால் கட்டி முடிக்கப்பட்டது. இதன் திறப்பு விழா மற்றும் பல்வேறு அரசு விழாக்களில் கலந்துகொள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் தொகுதிக்கு வருகை தந்தார். அவருக்கு எம்.எல்.ஏ. வசந்தன் கார்த்திகேயன் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தாலுகா அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. அடுத்து மாடூர்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மகாலில் கட்சி முன்னோடிகளுக்கு 10 ஆயிரம் மதிப்பிலான பொற்கிழிகளை உதயநிதி வழங்கினார். அதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. பள்ளி வளாகத்தில் நான் முதல்வர் திட்டம் குறித்து கலந்துரையாடினார். அப்போது அவர், “கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகள் ஒவ்வொருவரும் கல்லூரியில் முதல் மாணவராகத் திகழ வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம். இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 14 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெற்றுள்ளனர். இதில் கலை அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவ, மாணவிகளில் 1425 பேர் பணி நியமனம் பெற்றுள்ளனர். இந்தத் திட்டத்தின் கீழ் கலை அறிவியல் கல்லூரிகளுக்கு ஒரு கல்லூரிக்கு 70 லட்சம் என்ற அடிப்படையில் மொத்தம் 21 கோடியே 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதை மாணவ மாணவிகள் தங்கள் படிப்பில் திறமைகளை வளர்த்து அதன் மூலம் பயன் பெற வேண்டும்” என்று கூறினார்.
அடுத்து உலகம் காத்தான் பகுதியில் ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அரசு நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியர் ஷரவண் குமார், எம்.எல்.ஏ.க்கள் உளுந்தூர்பேட்டை மணிவண்ணன், சங்கராபுரம் உதயசூரியன் மற்றும் கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.