கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டை, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் நேற்று (01/01/2022) இரவு முழுவதும் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் பல வருடங்களுக்கு பிறகு வில்லுனி ஆறு உள்பட காட்டாறுகளில் தண்ணீர் செல்கிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பயிர்கள் முழுமையாக சாய்ந்து தண்ணீரில் மிதக்கிறது. கொத்தமங்கலம், காசிம்புதுப்பேட்டை, மேற்பனைக்காடு உள்பட பல கிராமங்களில் வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தவித்து வருகின்றனர். கொத்தமங்கலத்தில் இன்று (02/01/2021) நிகழ்ச்சி நடக்க இருந்த நிலையில் கனமழையால் திருமண மண்டபத்திற்குள் தண்ணீர் போனதால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வெளியேற்றினார்கள்.
வில்லுனி ஆற்றில் பல வருடங்களுக்கு பிறகு தண்ணீர் வந்ததால் மக்கள் மகிழ்ச்சியோடு சென்று படங்கள் எடுத்துக் கொண்டனர். அதே போல அம்புலி ஆற்றில் தண்ணீர் அதிகமாக சென்றதால் மாங்காடு- கீரமங்கலம் சாலை மற்றும் பேராவூரணி- அறந்தாங்கி சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
பேராவூரணி அருகே வாத்தலைக்காடு கிராமத்தில் பழைய வீடு ஒன்று இடிந்து சாய்ந்ததில் ஜனார்த்தனன் (வயது 71) என்பவர் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். ஒரே இரவில் கொட்டித் தீர்த்த கனமழையால் பெரும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளது புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள்.