Skip to main content

“நேருவின் புத்தகங்களை வாசித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பொறுப்பேற்றார்” - வைகோ பேச்சு!

Published on 29/12/2024 | Edited on 29/12/2024
He read Nehru books and took responsibility in the Communist Party of India Vaiko Talk

சென்னை, கலைவாணர் அரங்கத்தில்  விடுதலை போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் நல்லகண்ணுவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா இன்று (29.12.2024) நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தோழர் இரா. நல்லகண்ணு 100 நூறு கவிஞர்கள் நூறு கவிதைகள்" என்ற நூலினை வெளியிட்டார். இந்நிகழ்வில் மதிமுக தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ  பேசுகையில், “பண்டித ஜவஹர்லால் நேருவின் புத்தகங்களை வாசித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பொறுப்பேற்றார்.

சென்னையில் ஜனசக்தி பத்திரிக்கையில் மூன்று மாதம் பணியாற்றினார். நெல்லை மாவட்டத்தில் மாவட்டச் செயலாளராக நல்ல முறையில் பணியாற்றினார். ஒரே காலகட்டத்தில் பொதுவுடைமையும் , இந்துத்துவாவும் வேறு வேறு இடத்தில் தோன்றியது. நல்லகண்ணு இரண்டு வருடம் தலைமறைவு வாழ்க்கை நடத்தினார். காவல் துறைக்கு எப்படியோ தகவல் தெரிந்து அங்குச் சென்றார்கள். தாடியும் மீசையும் வைத்திருந்தார் நல்லகண்ணு. மீசையில் நெருப்பு வைத்தார்கள். ஒவ்வொரு முடியாக புடிங்கினர். இருப்பினும் நல்லகண்ணு அவர்கள் கேட்ட ஒரு கேள்விக்கும் பதில்  கூறவில்லை.

அம்பேத்கர் படத்தை நாங்கள் தான் திறந்து வைத்தோம். எங்களுக்குத் தான் அவர் பற்றிப் பேசத் தகுதி உள்ளது என‌ வலதுசாரி ஒருவர் தனியார் நிகழ்ச்சியில் கூறினார். அது முற்றிலும் பொய். அம்பேத்கர்,பொதுவுடைமை,சிறுகதைகள், கட்டுரைகள் என பல்வேறு தளங்களில் எழுதியிருக்கிறார் நல்லகண்ணு. தனக்குக் கிடைத்த விருது தொகைகளை எல்லாம் கட்சிக்கும், விவசாயச் சங்கங்களுக்கும், முதலமைச்சர் நிவாரண நிதிக்கும் வழங்கினார். ஒருமுறை அவரது மகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் 3 நாட்கள் தங்கியிருந்தார். அப்போது 3 நாட்கள் தங்கியதற்கான வாடகை 110 ரூபாயைக் கட்சி அலுவலகத்திற்குக் கொடுத்தார். அவரது  வாழ்வு தியாக வாழ்வு” எனப் பேசினார். 

சார்ந்த செய்திகள்