தமிழ்நாடு முழுவதும் அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தை திருநாளை வரவேற்கச் சமத்துவ பொங்கல் வைத்துக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது அனைத்து பள்ளிகளிலும் பொங்கல் விழாக்கள் கொண்டாடப்பட்டுள்ளது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 7.5% இட ஒதுக்கீட்டில் அதிகமான மாணவிகளை மருத்துவம் படிக்க உருவாக்கிய கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுவது போல பொங்கல் விழா கோலாகலமாக நடந்தது.
இதற்காகப் பள்ளி வளாகம் முழுவதும் மாணவிகள் வண்ண கோலமிட்டனர். அதோடு ஐந்திணை நிலங்களைக் குறிக்கும் வகையில் குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல், பாலை என தமிழகத்தின் நிலங்களைக் குறிக்கும் விதமாக அடையாளமான கொடிகளை ஏற்றி ஒவ்வொரு நிலத்திற்கான கற்றல் கற்பித்தல் இனிமையடை தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டுள்ள ஐந்திணை ஆசிரியர்கள், மாணவிகள் இணைந்து 5 மண் பானைகளில் பொங்கல் வைத்தனர். அப்போது மகிழ்வோடு பொங்கலோ பொங்கல் என்று குழவைவிட்டு ஒரே இடத்தில் வைத்துப் படையலிட்டு தீபம் காட்டிய பிறகு ஆயிரம் மாணவிகளையும் பள்ளி வளாகத்தில் ஒரே இடத்தில் அமர வைத்து அனைவருக்கும் தலைவாழை இலையில் ஆசிரியைகள் சர்க்கரைப் பொங்கல் விருந்து பரிமாறினார்கள்.
மேலும், ஆசிரியைகள், மாணவிகள், கும்மியடித்து ஆடிப்பாடி உற்சாகமாகப் பொங்கல் விழாவைக் கொண்டாடினர். தாயுள்ளதோடு ஆசிரியைகள் வாழை இலையில் பொங்கல் படைத்ததாக மாணவிகள் நெகிழ்ந்தனர். ஐந்து நிலங்களையும் அடையாளப்படுத்தும் விதமாக இந்த ஆண்டு ஐந்து பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டது என்கின்றனர் ஆசிரியர்கள்.