Skip to main content

“ஆளுநர் ராஜினாமா செய்து விட்டு தமிழ்நாட்டிலிருந்து வெளியேற வேண்டும்” - ஜவாஹிருல்லா காட்டம்!

Published on 08/04/2025 | Edited on 08/04/2025

 

Governor should resign and leave Tamil Nadu says Jawahirullah

தமிழக கவர்னர் ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கும்  நிலையில், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா, இன்று  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்,  "2023 அக்டோபர் மாதம் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாட்டின் ஆளுநர் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வைத்ததையும் ஊழல் வழக்குகள் தொடர அனுமதி தருவதிலும் தாமதம் செய்து வந்ததையும் சுட்டிக்காட்டி ஆளுநர் சட்டப்படி தவறு செய்கிறார்; சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்காததன் வாயிலாக தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார்; சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவுகள் மீது நடவடிக்கை எடுக்க கால வரம்பை நிர்ணயிக்கும் வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு வழக்கு தொடுக்கப்பட்டது. இன்று இந்த வழக்கின் விசாரணை நீதியரசர்கள் பர்திவாலா, மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கி இருக்கிறது.

குடியரசுத் தலைவருக்கு பத்து சட்டமுன்வடிவுகளை அனுப்பி வைத்த ஆளுநரின் நடவடிக்கையை ரத்து செய்தும் இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பிய 10 சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளித்திருக்க வேண்டும் என்றும் அவற்றை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது சட்டவிரோதம் என்றும் நீதி அரசர்கள் இத்தீர்ப்பில் ஆளுநரை கண்டித்து இருக்கின்றனர். தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடுகள் அரசியலமைப்பு சட்டம்  வகுத்து தந்த நோக்கத்திற்கு எதிராக உள்ளது என்றும் ஆளுநரின் செயல்பாடுகள் நேர்மையானதாக இல்லை என்றும் நீதியர்ர்கள் சாடியுள்ளனர். ஆளுநருக்கு என்று தனிப்பட்ட அதிகாரங்கள் இல்லை. அவர் சட்டமுன்வடிவுகளை நிறுத்தி வைத்தது சட்ட விரோதம் என்றும் நீதிமன்றம் கடும் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறது. 

அரசியல் நோக்கத்திற்காக ஆளுநர் பதவியை அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக ஆளுநர் பயன்படுத்தி வந்திருக்கிறார் என்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் வழியாக தெளிவாகிறது. எனவே தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர். என். ரவி அவர்கள் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்து விட்டு தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். 

இத்தீர்ப்பின் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள பல்கலைகழகங்களின் வேந்தராக பொறுப்பேற்கும்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எம் நெஞ்சார்ந்த பாராட்டுகள். திராவிட முன்னேற்றக் கழக அரசின் சட்ட போராட்டத்தின் வாயிலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் விடிவு காலம் பிறந்துள்ளது. தெற்கிலிருந்து மாநிலங்களின் உரிமைகளை தூக்கி படிக்கும் மற்றொரு சூரியன் உதயமாகியுள்ளது. ஒன்றிய அரசு ஆளுநர்கள் வழியாக பொம்மை அரசாங்கத்தை நடத்தி வருவதற்கு உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பால் முட்டுக்கட்டை போட்டிருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு உரித்தான அதிகாரங்கள் உறுதி செய்யப்பட்டு இருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்