
திருச்சியில் ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் பள்ளி வளாகத்திலேயே மது அருந்துவது தொடர்பாக புகார்கள் எழுந்த நிலையில் பள்ளியில் ஆண் ஒருவர் பெண்ணுடன் இரவில் தங்கி விட்டுச் செல்வதாக கூறும் வீடியோ காட்சி ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ளது வாளாடி. இங்கு அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளி வளாகத்தில் ஆண் மற்றும் பெண் ஒருவர் மதில் சுவர் மீது எகிறி குதித்த சம்பவத்தை தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள் அவர்களிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த நவீன் என்ற அந்த நபர் 'நாங்கள் அன் டைமில் இங்கு வந்து விட்டோம்' என தெரிவித்தார். அதற்கு ஆசிரியர்கள் 'இது என்ன லாட்ஜா? அன் டைமில் வந்தோம், தங்கினோம் என்று சொன்னால் என்ன அர்த்தம்' என கேள்வி எழுப்பினர்.
'நைட்டு இங்க படுத்துட்டு காலையில் போய் விடுவோம்' என அந்த நபர் சொல்ல', 'நாங்க என்ன லாட்ஜா கட்டி விட்ருக்கோம்' என கேள்வி எழுப்பினர். இந்த வீடியோவை ஆதாரமாக வைத்து அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதேபோல் கடந்த ஆறு மாதங்களாகவே பள்ளி வளாகத்திற்குள் சிலர் மது அருந்திவிட்டு பாட்டில்களை அங்கே தூக்கி வீசி விட்டுச் செல்வதும், பள்ளி வளாகத்தில் உள்ள உடைமைகளை சேதப்படுத்துவது போன்ற சம்பவங்கள் நடந்து வந்த நிலையில் இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.